புனித குழந்தை தெரேசம்மாள்
*எண்ணற்ற பாவிகளை மனமாற்ற உதவிய குழந்தை தெரெசம்மாளின் சிறு சிறு ஒறுத்தல் முயற்சிகள்*
இயேசுவுக்குப் பிரியமுடன் வாழவும் ஆத்துமங்களை இரட்சிக்கவும் குழந்தை தெரசம்மாளுக்கு அளவு கடந்த ஆசை. இதற்காக பல ஒறுத்தல் முயற்சிகளையும் புண்ணிய முயற்சிகளையும் செய்தார்கள்.இவைகளை ரோஜா மலர்களாகப் பாவித்து சிலுவையில் தொங்கும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்பார்கள்.
பிரான்சினி என்ற ஒரு பெரிய கொலைக்காரனைப் பற்றி, தெரெசம்மாள் பத்திரிகையில் வாசித்தார் அவன் அநேக கொலைகள் செய்திருந்தான். அதனால் அவனுக்கு மரணதண்டனை விதித்தார்கள். சில நாட்களில் அவன் தூக்கில் மரணமடையவிருந்தான்.
அவனை மனந்திருப்ப பல குருக்கள் முயன்றார்கள். அவனது ஆன்மாவைப் பற்றியும் நரகத்தைப்பற்றியும், இயேசுவைப் பற்றியும் அவர்கள் அவனிடம் பேசினார்கள். ஆனால், அவன் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவர்களது முகத்தைப் பார்க்கக்கூட மறுத்துவிட்டான்.
தெரெசம்மாள் இவன் மனந்திரும்ப செபிக்க ஆரம்பித்தாள்; ஒறுத்தல் முயற்சிகளும் பல செய்தாள். "*இயேசுவே நீர் அவனை மன்னித்து நரகத் தீயிலிருந்து நிச்சயம் காப்பாற்றுவீர்.* நான் முதன் முதலாக மிட்க விரும்பும் பாவி இவன். மீட்கப்பட்டான் என்பதற்கு எனக்கு ஓர் அடையாளம் கொடும்" என்று செபித்தாள்.சில நாட்கள் கழித்து அவனைத் தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். இன்னும் அவன் மனம் திரும்பவில்லை. தூக்குப்போடும் நேரம் வந்தது. திடீரென தன் பக்கத்திலிருந்த குருவானவரின் பாடுபட்ட சுரூபத்தை வாங்கி முத்தம் செய்தான். இதைக் கேட்ட தெரெசம்மாளுக்கு என்ன ஆனந்தம்!
யாரென்று தெரியாத கொலைக் குற்றவாளி மனந்திரும்பவதற்கு நம் புனிதை சிறு சிறு ஒறுத்தல் முயற்சிகளை செய்து வெற்றியும் பெற்றார்கள் என்றால்.
என் மகன்/மகள்(கணவன்/மனைவி/சகோதரன்/நண்பன்....)
இனி உருபடவே மாட்டான் அவன் மனமாறமாட்டான் என்று கத்தோலிக்கர்களாகிய நாம் நம்பிக்கை இழப்பது நியாயமா ? உலக தேவைகளை மட்டும் விடாமுயற்சியுடன் கேட்டு கடவுளிடமிருந்து பெறுகின்றோமே ? *நம் உறவுகளின் மனமாற்றத்தை விடாமுயற்சியுடன் கிறிஸ்தவிடம் ஏன் கேட்டுப்பெறுவதில்லை?*
இந்த பங்கு மக்கள் இனி திருந்தவே மாட்டார்கள் என ஒரு பங்குதந்தை நம்பிக்கை இழப்பதும், என் மகன்/ மகள் இனி திருந்தவே மாட்டான் என்ற மனநிலையும் அலகையின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஏனெனில் கிறிஸ்துவின் பாடுகளும், அவர் சிந்திய ஒவ்வொரு துளி திரு இரத்தமும்,அவரின் கொடூரமான கல்வாரி மரணமும், பாவிகள் மனந்திரும்புவதற்கே தவிர உலகத்தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமல்ல.
கிறிஸ்தவர்களால் எப்பேற்ப்பட்ட பாவிகளையும் கடவுளின் துணையால் மனந்திரும்ப முடியும் என்ற விடாமுயற்சி இன்று முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.
*கிறிஸ்தவனாகிய நான் என் வாழ்நாளில் நானும் மனம்திருந்த வில்லை,என்னைச் சார்ந்தவர்களை மனமாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் நான் கிறிஸ்தவன் என்ற மாபெரும் அழைப்பை வீணடித்துவிட்டேன் என்றே அர்த்தம்.*
புனித குழந்தை தெரசம்மாள் ஆன்மாக்களை மனமாற்ற செய்த சிறு சிறு ஒறுத்தல்கள் பல. அறையைப் பெருக்கினாலும், பாத்திரங்களைக் கழுவினாலும், சாப்பிடும் இடத்தை ஒழுங்கு படுத்தினாலும், இவை *ஒவ்வொன்றையும் ஆத்தும இரட்சணியத்திற்காக ஒப்புக் கொடுப்பாள். புனித சவேரியார் மனந்திருப்பிய அளவில், இவளும் இவ்வாறே ஆத்துமங்களை இரட்சித்தாள்.*
மடத்தில் வயதான ஒரு வியாதிக்கார கன்னியை இருந்தார்.அவர்களைத் திருப்திப்படுத்துவது மிக கடினம். எல்லாவற்றிலும் குறை கூறுவார்; அவருக்கு உதவி செய்ய மற்ற கன்னியர்கள் விரும்பவில்லை. ஆனால் தெரெசம்மாள் அவர்மீது எப்பொழுதும் அன்பாய் இருந்து அவருக்கு வேண்டிய உதவி செய்து வருவாள்.
ஒருநாள் கன்னியர்கள் சலவை செய்த போது ஒரு கன்னிகை கவனக்குறைவாக வேலைசெய்ததால், பக்கத்தில் வேலை செய்த தெரெசம்மாள் முகத்தில் துணி துவைத்த தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. தெரெசம்மாள் பொறுமையாக இருந்தாள். முகத்தில் விழுந்த அழுக்குத் தண்ணீரைத் துடைக்கக்கூட இல்லை.
மாலையில் தெரெசம்மாள் அறையில் எழுத உட்கார்ந்தாள். அப்பொழுது தான் யாரோ ஒருவர் தன் விளக்கைக் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரியவந்தது. இருந்தாலும் அது மௌன நேரம் என்பதால் பேசாமல் இருட்டில் உட்கார்ந்து, அந்த சிறு துன்பத்தை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தாள்.
தெரெசம்மாளிடம் ஓர் அருமையான தண்ணீர் கூஜா இருந்தது. ஒருநாள் அதை யாரோ எடுத்துக்கொண்டு பழைய உடைந்த கூஜா ஒன்றை அவள் அறையில் வைத்து விட்டார்கள். தெரெசம்மாள் முணுமுணுக்காமல், மடத்திற்கு தேவப்படாதப் பொருள் தனக்குக் கொடுக்கப்பட்டதை எண்ணி ஆனந்தம் கொண்டாள்.
சாப்பிடும் இடத்தில் தனக்கு எதுவும் விருப்பமில்லை எனக் காட்டிக்கொள்ளமாட்டாள். ஆகவே, ஒருவரும் எடுக்காத உணவுப்பொருளை அவளுக்குக் கொடுப்பார்கள். அவள் பல ஒறுத்தல் முயற்சிகள் செய்ய இது மிகவும் ஏதுவாய் இருந்தது.
தன்னோடு வாழ்ந்த கன்னியர்களுக்கு உதவி செய்ய அவள் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருப்பாள். எப்பொழுதுமே அவர்களுக்குச் சிரித்த முகத்துடன் வேலை செய்வாள்; கூடுமானால் மற்றவர்களுக்குத் தெரியாமலே அவர்களுக்கு உதவி செய்வாள்.
ஒரு கன்னியரின் பழக்க வழக்கங்கள் தெரெசம்மாளுக்கு அவர் மீது வெறுப்புத் தோன்றியது. ஆனால், இதை வெல்லுவதற்காகத் தெரசம்மாள் அவர்மீது விசேஷ விதமாக பிரியம்காட்டத் தொடங்குகிறார்கள் என்பது அந்த கன்னிகைக்கு ஆச்சரியமாயிருந்தது.
. "உலக வாழ்க்கை ஒரு கடல்; அதைக் கடந்து நாம் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும். இந்தக் கடலை நான் ஒரு கப்பலில் கடக்கிறேன், அந்தக் கப்பலை ஓட்டுபவர் இயேசு" என்று தெரெசம்மாள் சொல்வாள். இயேசுமீது அவளுக்கு இருந்த நம்பிக்கையும், அவள் தன்னை முழுவதும் இயேசுவிடம் ஒப்படைத்திருந்தாள் என்பதும் இதிலிருந்தே தெளிவாகிறது.
வியாதிக்காரர் அறையில் வேலை பார்ப்பதே அவளுக்கு அதிகப் பிரியம். வியாதிக்காரர்மீது அன்பாய் இருந்து அவர்களுடைய வேதனையைக் குறைக்கப் பிரயாசைப்படுவாள். ஏனெனில், "நான் வியாதியாயிருந்தேன். நீங்கள் என்னைக் கவனித்தீர்கள்..." என்ற இயேசுவின் வார்த்தைகள் அவள் மனதில் பதிந்திருந்தன.
அவள் விரும்பிய இன்னொரு வேலை, பீடத்தில் வேலை செய்வது. இயேசுவின் திருச்சரீரமாக மாறப் போகும் அப்பங்களைப் பாத்திரத்தில் அடுக்கி வைப்பதும், பூசைப் பாத்திரத்தைத் துடைத்துச் சுத்தம் செய்வதும் அவளுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நீங்கள் சிறுவர்களைப்போல் ஆகாவிட்டால் மோட்ச வாழ்வில் நுழைய முடியாது' என்ற இயேசுவின் வார்த்தைகளை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருந்தாள். ஆகையால், சிறு . குழந்தைகளைப்போல் பரிசுத்தமாகவும், - களங்கமில்லாமலும், தாழ்ச்சியாயும் இருக்கப் பிரயாசைப்பட்டாள்.
அநேக சிறு ஒறுத்தல் முயற்சிகளையும், புண்ணியக் கிரியைகளையும் செய்வதுடன் துன்ப வருத்தங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, இவைகளை நறுமணம் வீசும் பூக்கள் போல் இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்பாள்.
தேவ அன்னையின்மீதும் நம்பிக்கை வைத்தாள். மரியாயின் பிள்ளை அழியாது என்றும், அவள் தன் பிள்ளைகளைச் சோதனை வேளையிலும், துன்ப வேளையிலும் காப்பாற்றுவாள் என்றும் தெரசம்மாளுக்குத் தெரியும்.
தெரெசம்மாளுக்குப் பல துன்பங்களும் சோதனைகளும் வந்தன. அவள் எதைக் கண்டும் அஞ்சவில்லை. தன்னை இயேசுவின் கைகளில் உள்ள சிறு குழந்தையாகக் கருதினாள். அவர் சரியான பாதையில் தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
தெரெசம்மாள், தன் 24-ஆம் வயதில் - அதிக வியாதியாய் விழுந்தாள். அடிக்கடி இரத்தம் கக்கினாள். மூச்சுவிட முதலாய் முடியவில்லை. வேதனையோ அதிகம். இருந்தாலும் பொறுமையாக இருந்தாள். அவளைக் கவனித்த மருத்துவர், "அவள் ஒரு சம்மனசு" எனக் கூறினார்.
சிறு சிறு ஒறுத்தல் செய்து எண்ணற்ற ஆன்மாக்களை கடவுளிடம் கொண்டு சேர்த்த புனிதையைப்போல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரே ஒரு ஆன்மாவை(பாவியை) தத்து எடுத்து மனமாறுவதற்கு தொடர் செபம், தவம், பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் அவன் ஒரு நாள் மனம் மாறுவான்.உலகம் சமாதானமைடையும்.
புனித குழந்தை தெரசம்மாளே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment