முதல் வெள்ளி பக்தி முயற்சி

 

*முதல் வெள்ளி பக்தி முயற்சி*

நமது பாவங்களால் கடவுளின் இதயம் நோகடிக்கப்படுகின்றது.மனிதர்களின் உதவியும், ஆறுதலும் கடவுளுக்கு தேவைப்படுகின்றது என்ற *இரகசியம்* மனிதர்களுக்கு கடவுளால் தெரிவிக்கப்பட்டதே 

திருஇருதய பக்தி. 

"நீயாவது எனக்கு ஆறுதல் கொடு" என்று புனித மார்கரீத் மரியம்மாள் வழியாக மனுகுலத்திடம் நம் ஆண்டவர் கேட்ட திரு இருதய பக்திமுயற்சி இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களால் கைவிடப்பட்டுவிட்டது.அடுத்த தலைமுறைகளுக்கு இதை பற்றி தெரியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளி திருஇருதய ஆண்டவரிடம் நமது உலக வரங்களை கேட்பதற்கு அல்ல. நாம்,நமது குடும்பம், நமது தலைமுறைகள் செய்த பாவங்களால் இயேசுவின் திருஇருதயத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பரிகாரம் செய்து அவருக்கு ஆறுதல் தரவேண்டிய நாளே முதல் வெள்ளி.

*மனிதர்கள் கடவுளுக்கு உதவ முடியுமா ?ஆறுதல் தர‌முடியுமா ?*

இயேசுவின் சிலுவைப் பாதையில் சீமோன் , வெரோணிக்காமள் உதவியது போல இந்நாளில், நாமும் , நம் குடும்பமும் இயேசுவின் திரு இருதயத்தை காயப்படுத்தும் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை செய்து, நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாகவும், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மாதத்தின் முதல் வெள்ளி அன்று திருப்பலியில் கலந்து கொண்டு பக்தி மரியாதையுடன் நற்கருணை பெற்று, இயேசுவின் திருஇருதய காயங்களுக்கு பரிகாராமாக நற்கருணை ஒப்புக்கொடுக்க வேண்டிய நாளே‌ முதல் வெள்ளி. இந்த பக்தி முயற்சியே முதல் வெள்ளி பக்தி முயற்சி.

*போலி திரு இருதயபக்தி முயற்சிகளை தடுப்பதும் உண்மையான திருஇருதய பக்தி முயற்சிகளை இறைமக்களுக்கு கொண்டு செல்வதும் ஞானமேய்ப்பர்களின் கடமை*

திருஇருதய பக்தியாக தேர் இழுப்பதும், நேர்ச்சை செய்வதும், கேட்டது எல்லாம் திரு இருதய ஆண்டவரிடம் கிடைக்கும் என்ற தப்பறையான பக்தி முயற்சிகளால் உண்மையான திருஇருதய பக்தி முயற்சியை அழித்துவருகின்றன. 

ஆண்டவர், மனிதர்களிடம் கேட்ட உதவியை பெறமுடியாமல் தடுப்பதற்கு அலகையின் சூழ்ச்சிகளை முறியடித்து,திருஇருதய ஆண்டவருக்கு முட்களான நமது பாவங்களை தவிர்த்து, செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும் என்ற உண்மையான திரு இருதய பக்தியை இறைமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு ஞானமேய்ப்பர்களின் பொறுப்பாகும்.

எனவே சக மனிதர் உதவிக் கேட்டால் உதவி செய்வோம்.பங்குதந்தை உதவி கேட்டால் செய்வோம், ஆயர் உதவி கேட்டால் செய்வோம்.ஆண்டவர் கேட்ட உதவியை இதுவரை செய்யமால் இருப்பது சரியாகுமா ? தெரிந்து கொள்ளாமல் இருப்பது நியமாகுமா ?திருஇருதய‌பக்தி ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திலும் அனுசரிக்கப்பட்டால் எண்ணற்ற ஆன்மாக்கள் மனமாற உதவும்.

*திரு இருதயபக்தி முயற்சியை கடைப்பிடிப்போருக்கு நமது ஆண்டவரின் 12 வாக்குறுதிகள்*

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இருதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும், கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திரு இருதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.

11. திரு இருதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.

முட்களால் சூழப்பட்டுள்ள இயேசுவின் திரு இருதய சொருபத்தின் முன் நின்று விண்ணப்பங்களை அடுக்காமல், அவர் திருஇருதயத்தை காயப்படுத்தும் நமது பாவங்களை நம் தலைமுறைகள் முற்றிலும் தவிர்த்து நம் இல்லத்தில் திரு இருதய அரசாட்சி நடைபெறுவதற்கு தேவையான பரிசுத்தமான‌ வாழ்க்கை வாழ்வோம்.


 

இயேசுவின் திருஇருதயமே !

எங்கள் மேல் இரக்கமாயிரும்

மரியாயின் மாசற்ற இருதயமே !

எங்களக்காக வேண்டிக்கொள்ளும்.


 


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!