பிப்ரவரி 14 புனித.வாலென்டீன் திருநாள்
*பிப்ரவரி 1️⃣4️⃣ம் தேதி வேதசாட்சியான புனித.வாலென்டீன் திருநாள்*
இவருடைய திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. ஆனால், தூய்மைக்கு எதிரான அசுத்தத்தில் மூழ்கியிருக்கிற உலகத்தினால், உத்தம கக்தோலிக்க குருவானவரும் வேதசாட்சியுமான புனித வாலென்டினைப் பற்றிப் புரிந்து கொள்ளாமலேயே , எதிர்மறைக் கருத்துக்களால், அவரை பசாசுத்தனமாகப் புகழ்ந்து கொண்டாடுவதைக்கண்டு வேதனையடைகிறோம்;
புனித வாலென்டின் என்பவர் யார்?
இவர், ஒரு கத்தோலிக்க குருவானவர்; உரோமையை 2ம் கிளாாடியுஸ் என்பவன் ஆண்டபோது, இவர் உரோமையில் வசித்தார். இச்சமயத்தில், உரோமையிலிருந்த அஞ்ஞான மதத்தின் விக்கிரகங்களை வழிபடாத காரணத்தினால், கிறீஸ்துவர்களை, இவன் சிறையில் அடைத்தான்.
*ஏன் புனித வாலென்டின் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்?*
இதன் விவரத்தை நன்கு அறிந்துகொள்வதற்கு, நாம் உரோமையின் சரித்திரத்தைப் பற்றி பார்ப்போம்: பண்டைக்கால உரோமாபுரியில் இந்த நாளில் தான், சுத்திகரத்தையும் செழுமையையும் குறிக்கும் அடையாளமாக பெப்ருவா என்று அழைக்கப்படுகிற மூன்று நாள் திரு விழா துவங்கும்! இத்திருவிழா, பெப்ருவுஸ் என்ற உரோமை தேவதையை வழிபடும்படியாகக் கொண்டாடப்படும். செழுமைக்கான வழி பாட்டுச் சடங்குகள் நடத்தப்பட்டு முடிந்தபிறகு, ஆண்கள், ஒரு ஜாடிக்குள் பெண்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதிப் போட்டு, அவற்றிலிருந்து ஒவ்வொருவராக பெயரை எடுப்பார்கள். எந்த ஆண் எந்த பெண்ணின் பெயருடைய சீட்டை எடுக்கிறானோ, அவன், அப் பெண்ணுடன், திருவிழா முடிகிற வரைக்கும் அசுத்தப் பாவத்தில், விபச்சாரத்தில், ஈடுபட்டிருப்பான். இத்தீமை நிறைந்த வழக்கத்திற்கு எதிராக அயராமல்,புனித வாலென்டின் கண்டித்துப் பிரசங்கித்து வந்தார். இதைக் கண்ட அஞ்ஞான உரோமையர்கள், இவர்மேல் கோப மடைந்தனர்; இவரைக் கொல்வதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். அவர்கள் காத்திருந்த அந்த சந்தர்ப்பம் வந்தது: உரோமை சக்கரவர்த்தி, தனது மெய்காப்பாளர்களாக, விசேஷ சிறப்புக் காவல் படை வீரர்களாக வைத்திருந்த பிரெட்டோரியன்ஸ் என்று அழைக்கப்படுகிற வீரர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தான்;அதில் பெரும்பாண்மையானவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்ததால், அவர்களை சகல அசுத்தப் பாவங்களிலிருந்தும் பாதுகாக்கும்படியாக, புனித வாலென்டின்,அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்த *பிரெட்டோரியன் காவல் படையினர் யார்?*
இப்படைவீரர்களை முதன்முதலில் அகஸ்டஸ் சீசர் ஏற்படுத்தினான். மிகச்சிறந்த திறமையுடையவர்களும், மிகுந்த பலசாலிகளும், உரோ மாபுரி சக்கரவர்த்திக்குப் பிரமாணிக்கமுடையவர்களுமான இவர்களை, சக்கரவர்த்தியே நேரில் தேர்வு செய்து, தன் மெய்காவலாளர்களாக சேர்த்துக் கொள்வான். இவர்களை சீசர் நேரடியாக தனக்குக் கீழ் இருக்கும்படி வைத்திருந்தான். படையில் வீரர்கள், அல்லது தளபதிகள், தனக்கு எதிராகக் கலகத்தில் இறங்கினால், இவர்களை அனுப்பி, சீசர், அவர்களை அடக்கியாளுவான். போருக்கு, மற்ற எந்த இடத்திற்கு சக்கரவர்த்தி சென்றாலும், அவனுடைய மெய்க்காப்பாளர்களாக, பிரெட்டோரியன்ஸ் செயல்பட்டார்கள்.
2ம் கிளாடியுஸ் ஆண்ட காலத்தில் உரோமை சாம்ராஜ்ஜியம், 3ம் நூற்றாண்டில், வடக்கே ஜெர்மனியிலிருந்து, தெற்கே எகிப்து வரை பரவி விரிவடைந்திருந்தது; இம்மாபெரும் சாம்ராஜ்ஜியத்தில் ஆங் காங்கே அவ்வப்போது குழப்பமும், அரசனுக்கு எதிரான கலவரங்களும் நிகழ்வது வழக்கமான காரியமாயிருந்ததால், அத்தகைய கலவரங்களை அடக்குவதற்காக சக்கரவர்த்தி, தனது மெய்க்காப்பாளர்களான பிரெட்டோரியப் படையினரை அனுப்பி வைக்க நேரிடும்; எனவே தான், பரந்து விரிந்த உரோமை சாம்ராஜ்ஜியம் முழுவதும் ஆங்காங்கே நிகழும் கலவரங்களை அடக்குவகற்காக எப்போதும், எல்லா இடங்களுக்கும் இடைவிடாமல் செல்ல நேரிடுவதால், குடும்பத்தைத் தவிர்த்துத் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற கட்டளையை அரசன், பிரெட்டோரியப் படையினருக்குக் கொடுத்திருந்தான்.
பிரெட்டோரியப் படையிலிருந்த அநேகக் கத்தோலிக்கப் போர்வீரர்கள் ஒழுக்கக்கேடான விபச்சாரத்தில் ஈடுபடாமலிருப்பதற்காக,புனித வாலென்டின்,அவர்களுக்கு பரிசுத்த மெய்விவாகம் என்கிற தேவதிரவிய அனுமானத்தை அளித்து, திருமணம் செய்து வைத்து, அவர்களை அவர்களுடைய மனைவிகளுடன் இணைத்து வைத்தார்.
இதைப் பற்றி, உரோமை அஞ்ஞானிகள், சக்கரவர்த்தி கிளாடியுஸிடம் அறிவித்தபோது, உடனே, அவன், புனித வாலென்டினைக் கொன்றுபோடும்படி கட்டளையிட்டான்.
270ம் வருடம், பிப்ரவரி 14ம் தேதி, பெப்ருவா என்ற அஞ்ஞான உரோமைத் திருவிழா தினத்தன்று, *புனித வாலென்டின், தலை வெட்டிக் கொல்லப்பட்டு வேத சாட்சியாக மரித்தார்.* அவருடைய பரிசுத்த சரீரம் இரகசியமாக சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. நான்காம் நூற்றாண்டில், உரோமாபுரி கிறீஸ்துவ சாம்ராஜ்ஜியமாக மாறியபிறகு, முதலாம் ஜூலியஸ் பாப்பரசர், இக்கல்லறையின் மேல், புனித வாலென்டினுக்குத் தோத்திரமாக ஒரு பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டினார்; பிப்ரவரி 14ம் தேதியன்று , இவருடைய திருநாள் ஏற்படுத்தப்பட்டது.✝️
புனித வாலென்டினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

Comments
Post a Comment