நவம்பர் 2 மட்டுமல்ல வருடம் முழுவதும் இறந்தவர்களுக்காக செபிக்க வேண்டியது அடிப்படை கத்தோலிக்க கடமை-2
*உத்தறிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் வணக்க மாதம்*
உன் பலியும் காணிக்கையும் முழு நிறைவு பெற வறியவருக்கு பிச்சையிடு.தாராள குணம் வாழ்வோரால் விரும்பப்படுகிறது. *இறந்தோருக்கும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியை தடை செய்யாதே.* சீராக் 7(36-37),திரு விவிலியம் சீராக் 7(32-33)
இறந்தவர்களை கல்லறையில் அடக்கம் செய்வதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை.கல்லறை திருநாள் மட்டும் அவர்களுக்காக செப்பித்தால் போதாது. நாம் கல்லறை போகும் வரை அவர்களுக்காக தொடர்ந்து திருப்பலி பங்கேற்கவும் செபிக்கவும், தான தர்மங்கள் செய்யவும் வேண்டும்.
நாம் கண்ணீர் சிந்தி அழுவதாலோ !அவர்களுக்கு பிடித்தவற்றை கல்லறையில் வைப்பதாலோ,இறந்த ஆன்மாக்களுக்கு எந்த பலனுமில்லை.நாம் பக்தியோடு பங்கெடுக்கும் திருப்பலி,சிலுவைப் பாதை,செபமாலை,தான தர்மங்கள்,அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப நாம் செய்யும் பரிகாரங்களே அவர்களுக்கு உதவும்.
செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரம் செய்யாமல் மரித்த நம் முன்னோர்கள் நித்திய இளைபாற்றியை சுலபமாக பெற்றுக்கொள்வதில்லை.நமது உதவி கட்டாயம் தேவை.நமது செபங்கள் தர்மங்கள் இந்த ஆன்மாக்களின் வேதனையையும், வேதனையின் நாட்களை குறைக்கும்.
இதனை நம் தலைமுறைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும்.இல்லையேல் நாமும் எந்த உதவியின்றி, வேதனையின் நாட்கள் குறைக்கப்படாமல் உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனைப்படுவது உறுதி.
*மோட்சம் ,நரகம் போதுமே எதற்க்காக உத்தரிக்கும் ஸ்தலம் ? எனனைப்படி அல்லது வருத்தப்படு புத்தகத்திலிருந்து..*
ஒரு சாவான பாவத்திற்கு தண்டனையாக ஆன்மாக்கள் நித்தியமாக நரகத்திற்கு தள்ளப்படுவதுப்போல, தெரிந்தே கணக்கற்ற அற்ப பாவங்கள் புரிந்த ஆன்மாக்களை நரகத்தில் தண்டிப்பதும் நீதியில்லை அதே சமயம் மோட்ச மகிமைக்கும் வாய்ப்பில்லை எனவே செய்த பாவங்களுக்கேற்ப்ப உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனையுடன் சுத்திகரிக்கப்பட்டு பின் பரிசுத்தமாக மோட்சம் செல்வதே நம் ஆண்டவரின் நீதி.
பல ஆன்மாக்கள் சாவான பாவமும் செய்திருக்கலாம், அதற்காக சிறிதளவே வருத்தப்பட்டு, சிறிது பாவப்பரிகாரம் செய்திருக்கலாம். அல்லது அதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். பாவமன்னிப்பின் மூலம் குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பாவங்களுக்கு செலுத்த வேண்டிய அநித்திய அபராதக்கடன்(பரிகாரங்கள்) தீராததால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவித்தே தீர வேண்டும்.
"மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் மத்தேயு 12-36" என நமதாண்டவர் கூறுகிறார். மேலும் "கடைசி கணக்கை செலுத்தும் வரை சிறையிலிருந்து செல்ல இயலாது மத்தேயு 5-26" எனவும் தெரிவிக்கிறார்.
புனிதர்கள் குறைந்த அளவில் சிறிய பாவங்களே புரிந்திருந்தாலும், அதற்காக அதிக அளவில் வருத்தப் பட்டு கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டனர். வாழும்போதே செய்த பாவங்களுக்கு பரிகாரங்களை செய்து ஈடு செய்தனர்.
*நாமோ கடுமையான, பல பாவங்கள் புரிந்தாலும் அதற்காக சிறிய அளவிலே வருத்தப்பட்டு, தவ முயற்சிகளும் சிறிதே செய்கின்றோம்; அல்லது அதுவும் செய்வதில்லை.சிறிய தவறாக நமக்குத் தெரிவது, கடவுள் முன் உண்மையில் மிகப் பெரிய குற்றமாக உள்ளது.*
நாம் பலவீனர்கள், பாவத்திற்கு வற்புறுத்தப் பட்டிருக்கலாம். உண்மைதான்.ஆனால் பலவீனத்திலிருந்து மீள கடவுள் நமக்கு அபரிமிதமான வரங்களைப் பொழிந்துள்ளார். மேலும் நமது பாவங்களின் விளைவுகளைக் காண போதுமான அறிவினையும். பலவீனத்தை வெல்வதற்கு தேவையான உத்திகளையும் வழங்கியுள்ளார். இருந்தும் தொடர்ந்து பலவீனர்களாகவே இருந்தால் முற்றிலும் அது நமது பொறுப்பே. நாம் கடவுள் தரும் பலத்தையும் வரங்களையும் பயன்படுத்துவதில்லை. நாம் போதுமான அளவு செபிப்பதில்லை. கடவுள் தரும் தேவ திரவிய அனுமானங்களை முறையாக பெற்று பயனடைவதுமில்லை.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment