பாத்திமாவில் தேவமாதா வெளிப்படுத்திய நரக காட்சி

 




*பாத்திமாவில் மாதா,மூன்று சிறுவர்களுக்கு வெளிப்படுத்திய - நரகக் காட்சி*

“நமதன்னை  தன் கரங்களை விரித்தார்கள். அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியைப் பிளந்தது போல் காணப்பட்டது. 

அங்கே ஒரு நெருப்புக் கடலை நாங்கள் கண்டோம். அந்நெருப்பினுள் பசாசுக்களும், ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச் சிவந்து ஊடுருவிப் பார்க்கக் கூடிய தணல் போலிருந்தனர்.  

மானிட வடிவத்தில், சிலர் கறுப்பாக, அல்லது பித்தளை நிறமாக இருந்தனர்.  மேகம் போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்கு மிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெருப்புப் பொறிகளைப் போல பாரமோ, நடுநிலையோ இல்லாமல் எப்பக்கமும் விழுந்தனர். 

வேதனையாலும் எல்லாவற்றையும் இழந்து விட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்குப் பயங்கரத்தை உண்டாக்கியதால், நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம்.

பசாசுக்கள் அகோர, அரோசிகமான இனந்தெரியாத மிருகங்களைப் போலும், ஊடுருவிப் பார்க்கக் கூடிய எரியும் நிலக்கரி போலும் மற்றவர்களிடமிருந்து பிரித்தறியக் கூடியனவாயிருந்தன. பயம் மேலிட்டு உதவி தேடுவது போல் நாங்கள் நம் அன்னையை நோக்கிக் கண்களை உயர்த்தினோம்.  அவர்கள் எங்களைப் பார்த்து அன்புடன், ஆனால் துயரத்தோடு இவ்வாறு கூறினார்கள்:

“பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள்.  அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்."என்றார்கள்.

இன்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பேசப்படாத அல்லது மறுதளிக்கப்படும் கத்தோலிக்க விசுவாச சத்தியம் *நரகம்*.



நரகம் இருக்கிறது என்று  ஏற்றுக்கொண்டவர்களும் , நரகத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு மாதா தந்த உத்தரியத்தை அணியாமல் இருப்பதற்கான‌ முக்கிய காரணம்,நரகத்தை பற்றிய எச்சரிக்கும் போதனைகள் நீர்த்து போனதாலேயே.

உத்தரியம் அணிந்து மரிப்பவருக்கு நரகம் இல்லை என்று மாதா நமக்கு தந்த அற்புதமான மீட்பின் உதவியை ஏற்றுக்கொள்ளவும், அணியவும்‌, இன்று மாதா பக்தர்களே தயாராக இல்லை.

மாதாவின் பிள்ளைகள், பக்தர்கள்,சேனைகள் என்று சொல்லி கொண்டு மாதா அணியச் சொன்ன உத்தரியம் அணியாமல், மாதா செபிக்க சொன்ன குடும்ப செபமாலை செபிக்காமல் நமக்கு விருப்பப்பட்ட பக்திமுயற்சிகளை பின்பற்றினால் மாதாவின் இருதயத்தை மேலும் காயப்படுத்தும்.நமது மீட்பும் கேள்விகுறியாகும் !

நரகம் இருப்பது உண்மை என்பதை நிரூபிக்க, நரகத்தை  நேரடியாக திறந்து காண்பித்து பாத்திமாவிலுள்ள மூன்று சிறுவர்கள் வழியாக நம்மை எச்சரித்தார்கள் நம் தேவ மாதா.

பாத்திமா மாதாவின் எச்சரிக்கையை ஏற்று,பாவம் செய்வதை தவிர்ப்போம். புண்ணியங்களை செய்வோம்‌, செய்த பாவத்திற்கு, வாழும் போதே உரிய பாவ பரிகாரங்கள் செய்வோம். 




கடவுள் நமக்கு அனுமதிக்கின்ற துன்பங்களை  நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும்,பாவிகள் மனந்திரும்பவும் அமைந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம்.

மாதாவுக்கு கீழ்படிந்து தினமும் குடும்ப செபமாலை செபிப்போம்.உத்தரியம் அணிவோம்.நாமும் மோட்சம் செல்வோம்.நம்மை சார்ந்தவர்களையும் மோட்சத்திற்கு அழைத்துச்செல்ல செபிப்போம்,உதவுவோம்.

கிறிஸ்து மனித்தவராம் எடுத்து சிலுவையில் மரித்தது, நாம் நரகம் சென்றுவிடமால் மீட்பதற்க்கும் மோட்சம் செல்ல வேண்டும் என்பதற்கு மட்டுமே.

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!