உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள்
தான் வரைந்த ஆபாசப்படத்தை பார்த்து பலர் பாவத்தில் விழ காரணமாயிருந்ததால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்புறுகிறேன்.
கடவுள் எந்த அளவிற்கு நீதியோடு இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் இறந்துப்போன ஓர் ஒவிய ஆன்மாவின் சாட்சியம்.
ஸ்பெயின் நாட்டில் ஒரு கிறிஸ்தவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாயிருந்தான். அவன் வாலிபனாய் இருந்தபோது காம உணர்சியைத் தூண்டும் வகையில் ஒருமுறை ஓவியம் வரைந்தான். வெட்கப்பட்ட பலர் இந்தப் படத்தைப் பார்க்கக் கூட துணியவில்லை. அதை ஒரு பிரபு விலைக்கு வாங்கித் தன் மாளிகையில் மாட்டி வைத்தான். அதைக் கண்ட சிலர் மோக பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களாய் சில முறை பாவத்திலும் விழுந்தார்கள்.
இப்படி அடுத்தவரின் உணர்ச்சியைத் தூண்டுமளவுக்கு ஒவியம் வரைந்தவனுக்கு முதிய வயதில் நல்ல புத்தி வந்தது. இத்தகு படத்தை வரைந்ததால் மிகவும் மனஸ்தாபப்பட்டு தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக செபித்தல் முதலான புண்ணிய காரியங்களைச் செய்தான். அத்தகைய படத்தை மறுமடியும் வரையாமல் தேவமாதா மற்றும் புனிதர்கள் பலரின் படத்தை வரையலானான். இப்படங்களைப் பார்த்த அனேகருக்கு பக்தி ஏற்படலாயிற்று. இறுதியில் ஒருநாள் அந்த ஓவியன் நல்ல மரணமடைந்தான்.
அவன் இறந்து சில நாட்கள் ஆயின. ஒருநாள் புனித தெரசா சபையைச் சார்ந்த குருவானவர் ஒருவருக்கு அவன் தோன்றி,
“ சுவாமி என் பேரில் நீங்கள் இரக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறேன். ஆபாசப்படத்தை வரைந்ததற்காக அதை வரைந்த என் வலது கரம் இந்த கடுமையான நெருப்பில் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறது” என்று கூறி துயரப்பட்டு அழுதான்.
குருவானவரோ, “ நீ பலமுறை தேவமாதா படங்களையும், புனிதர்களின் படங்களையும் அறிந்ததை நான் அறிவேன். இப்படி இருக்கையில் நீ எந்த பாவத்திற்காக இப்படி உத்தரிக்கிற ஸ்தலத்தில் மிகவும் அவதிப்படுகிறாய்?” என்று கேட்டார்.
ஒவியனின் ஆத்துமம், “ நான் மரித்தவுடன் நடந்த தனித்தீர்வையில் கடவுள் முன்னிலையில் என்னுடைய நடவடிக்கைகளுக்கு கணக்கு கொடுக்கும்போது பசாசு என்னைப் பற்றி கடவுளிடம் ஒரு புகாரை முன் வைத்தது. என்னுடைய வாலிபப் வயதில் நான் ஆபாசமாக வரைந்த பெண்ணின் உருவம் இன்னமும் ஒரு பிரபுவின் அரண்மனையில் இருப்பதாகவும் அதைக்கண்ட சிலர் இன்னமும் மோக பாவத்தில் விழுந்து தங்களைக் கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு சிலர் அந்தப் படத்தைக் கண்டு இரசித்து பெரும் பாவம் கட்டிக்கொண்டவர்களாய் நரகத்திற்கு போனதாகவும் குற்றம் சாட்டியது”
அதற்கு என் காவல் சம்மனசானவர் ,
“ நான் முன்னே செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பரிகாரம் செய்ததையும் அதன் பின் மனம் வருந்தி தேவமாதாவின் படங்களையும் புனிதர்களின் படங்களையும் நான் வரைந்ததையும் அதன் மூலம் பலர் பக்தி மிக்கவர்களாக மாறியதையும் என் பொருட்டு ஆண்டவரிடம் எடுத்துக் கூறி எனக்காக சிபாரிசு செய்யவே ஆண்டவராகிய இயேசு என் பிழை பொறுத்து என்னை நரகத்திற்கு அனுப்பாமல் நான் செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே எனது வலது கையைப் புதைத்துவிட்டார். இப்போதோ உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு காலம் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
பிரபுவின் அரண்மனையில் இருக்கும் ஆபாசப்படம் அழியும்வரை என் வேதனையும் மாறப்போவதில்லை. எனவேதான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். எனவே நீங்கள் பிரபுவிடம் சென்று அந்த ஆபாச ஓவியத்தை உடனடியாக எரிக்கச் சொல்லி அறிவுரை கூற வேண்டும். உங்களுடைய யோசனையை அவர் ஏற்றுக் கொள்வதற்காக இன்னொரு செய்தியையும் நீங்கள் அவருக்கு அறிவிக்க வேண்டும்” என்றது.
“ இன்னும் சில நாட்களுக்குள் பிரபுவின் இரண்டு பிள்ளைகளும் இறந்து போவார்கள். உங்கள் அறிவுரைக்கு அவன் செவிசாய்க்காவிட்டால் பிரபுவே கொஞ்ச நாட்களுக்குள் இறந்துவிடுவானென ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்றெல்லாம் அந்த குருவானவரைக் கேட்டுக்கொண்ட உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஓவியனின் ஆன்மா வேண்டுகோள் வைத்து மறைந்துபோனது.
அதன்பின் அந்தக் குருவானவர் பிரபுவைச் சந்தித்து தனக்கு நேர்ந்த அனுபவம் அனைத்தையும் அவனிடம் எடுத்துக்கூறினார். இதைக் கேட்ட பிரபு பயந்துபோனவனாய் உடனடியாக அந்த ஓவியத்தை தன் கையாலேயே தீயிலிட்டு எரித்தான். ஆனாலும் அந்த ஓவியனின் ஆன்மா கூறியிருந்தபடியே அந்த பிரபுவின் இரண்டு பிள்ளைகளும் இறந்து போயினர். மிகவும் அச்சப்பட்ட அந்த பிரபு அந்த ஆபாசப்படத்தை விலைக்கு வாங்கிய பாவத்திற்கு பரிகாரமாய் தவம் செய்தது மட்டுமல்லாமல் பெரும்தொகை செலவிட்டு தேவமாதா படத்தையும் புனிதர்களின் படத்தையும் வாங்கி அரண்மனையில் வைத்தான்.
பிரபுவின் மனம் மாறிய நடவடிக்கைக்குப் பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ஓவியனின் ஆன்மா மோட்சத்திற்கு செல்வதை குருவானவர் தரிசனத்திலே கண்டார்.
நன்றி : உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்-52.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment