ஜெபமாலை புதுமைகள் -5
1978 ல் செபமாலை ஒரு கல்லூரிமாணவியை தொடர்கொலைகாரனிடமிருந்து காப்பாற்றியது.
ஜனவரி 15 , 1978, அதிகாலை 3:00 மணியளவில், இளம்பெண்களை தொடர்ச்சியாக கொலைகள் செய்து வந்த டெட் பண்டி என்னும் கொலைகாரன் புளோரிடா மாநில பல்கலைக்கழக சி ஒமேகா மகளிர்விடுதியில் இருமாணவிகளை கொலைசெய்துவிட்டு மேலும் கண்ணில் படும் மாணவிகளை கொலை செய்யும் எண்ணத்துடன் அடுத்த அறைகளுக்கு போனான்.
பந்துமட்டையை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மூன்றாவது மாணவியின் அறைக்கு சென்றபோது, அம்மாணவி தனது கைகளில் செபமாலையை இருக்கபற்றிக்கொண்டு உறங்குவதைக் கண்டதும் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான்.
இச்சம்பவங்களுக்குபிறகு, அந்த மாணவி விசாரணையின் போது அதிகாரிகளிடம், தான் தனது பாட்டிக்கு கல்லூரியில் சேருவதற்கு முன்னர் ஒவ்வொருநாள் இரவும் மறக்காமல் அவளது பாதுகாப்பிற்காக செபமாலை செபிப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததாகவும், சில சமயங்களில் செபமாலை செபிக்கும்போது அப்படியே உறங்கிப் போய்விடுவதாகவும் கூறினாள். அந்த இரவிலும் தான் செபித்துக்கொண்டிருக்கும் போதே செபமாலையை கைகளில் பிடித்துக்கொண்டே உறங்கிவிட்டதாகவும் அந்த சமயத்தில் தான் கொலைகாரன் அவளது அறைக்கு வந்ததிருக்கலாம் என்று கூறினாள்.
பிடிபட்டபின், பண்டி தான் 30 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கொலைகளை செய்திருப்பதாக தனது குற்றங்களை ஒப்புக்கொண்டான்.
இதனை குறித்து அருட்திரு ஜோசப் எஸ்பெர் தனது அன்னைமரியாவோடு இயேசுவிடம்"(With Mary to Jesus) என்ற புத்தகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.
" டெட்பண்டி தனது குற்றங்களுக்காக மரணதண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, மோன்சினோர் கெர் அவர்களை தனது ஆன்மீக ஆலோசகராக இருக்கும்படி கேட்டான். இத்தருணத்தை பயன்படுத்தி குருவானவர் பயங்கரமான அந்த இரவில் நடந்ததைப் பற்றி அவனிடம் கேட்டார்.
பண்டி அவரிடம் தான் அந்த அறைக்கு அம்மாணவியை கொலை செய்யும் எண்ணத்தோடு நுழைந்தபோது, அதனை செய்யவிடாமல் ஏதோ ஒரு சக்தி தன்னை தடுத்ததாக கூறினான்".
அருட்திரு. எஸ்பெர் மேலும் கூறும் போது,
" செபமாலையானது நமது ஆன்மீக வளர்ச்சிக்காக உதவுவது மட்டுமன்றி, சாத்தானின் ஆட்சியை வேரறுக்கின்றது.
புகழ்பெற்ற பேய்களை விரட்டும் வத்திக்கானின் அருட்திரு கபிரியேல் அமோர்த், ஒருநாள் அவரது சக குருவானவர் பேயினை விரட்டும் போது பேயானது, " ஒவ்வொரு அருள்நிறை மந்திரமும் எனது தலையில் இடியாக விழுகின்றது. கிறிஸ்துவர்கள் செபமாலையின் சக்தியை உணர்ந்து சரியாக பயன்படுத்தினால், அந்த நாள் எனது ஆட்சியின் முடிவு நாள் " என்று கூறியதாக சாட்சியமளித்துள்ளார்.
நமது பாதுகாப்பிற்காகவும், சாத்தானின் படைகளை வெற்றி கொள்ளவும் தினமும் நமது மாமரியின் செபமாலையை இனியாவது செபிப்போம்.
சேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment