புனித பிலோமினா
இன்றைய பெருவிழா
ஆகஸ்ட்-11
அர்ச்.பிலோமினம்மாள் கொஞ்சம் நீண்ட பதிவு
பிறப்பு & இறப்பு
மூன்றாம் நூற்றாண்டில்
பிலோமினம்மாவின் சரிதை
என் சிறைவாழ்வினால் சகோதரர் சகோதரிகளுள் பெரும்பாலோர் ஆண்டவரை உறுதியாக நம்பிக் கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள்.
பிலிப்பியர் 1:14
பிலோமினா ஒரு கிரேக்க நாட்டு சிற்றரசனின் மகள். அவர் தாயும் அரச குலத்தைச் சேர்ந்தவர்களே. அவர் பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லையென்பதால் அவர்கள் எப்போதும் தங்கள் பொய்த் தேவர் களுக்குப் பலியிட்டும் ஒரு குழந்தைக்காக விண்ணப்பித்தும் வந்தார்கள். அவர்களுக்கு புப்ளியுஸ் என்ற குடும்ப மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிறீஸ்தவர். பிலோமினா பெற்றோர்களின் குருட்டாட்டத்தைக் கண்டு இரங்கிய அவர் பிள்ளைப் பேறில்லாத அவர் தாய் மீது அனுதாபம் கொண்டார். பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு, கிறீஸ்தவ விசுவாசத்தைப் பற்றி அவர்களிடம் பேசி: “உங்களுக்குக் குழந்தைப்பேறு வேண்டுமென்றால் ஞானஸ்நானம் பெற்று சேசு கிறீஸ்துவின் மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்"' என்று கூறினார். அவருடைய வார்த்தையுடன், வரப்பிரசாதமும் வந்தது. அவர் பெற்றோரின் இருதயங்கள் இளகின. கிறீஸ்தவர்கள் ஆக அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பிக்கப்பட்ட பின் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அரசவையில் இருந்த பலரும் அவர்களுடன் ஞானஸ்நானம் பெற்றனர். ஓராண்டுக்குப் பின் ஜனவரி மாதம் 10ம் தேதி பிலோமினா பிறந்தார். முதலில் அவரை லூமினா (ஒளி) என்று அழைத்தார்கள். காரணம் அவர் விசுவாச ஒளியில் பிறந்ததினால். ஞானஸ்நானத்தில் பிலோமினா அதாவது ஒளியின் மகள் என்று அருமையோடு அழைக்கப்பட்டார். கிறீஸ்துவின் ஒளி பிலோமினாவின் ஆன்மாவில் இருந்தது. அவர் பிறப்பின் காரணமாக நிறைய குடும்பங்கள் அந்த சிற்றரசில் கிறீஸ்தவர்களானார்கள். சுவிசேஷ போதனைகள் அவரின் இருதயத்தில் மேலும் மேலும் ஊன்றப் பட்டு வளர்ந்தார். பிலோமினா அவரின் ஐந்தாவது வயதில் புது நன்மை வாங்கி சேசுவை அவர் உள்ளத்தில் பெற்றுக்கொண்டார். அன்று கன்னியர்களின் மணவாளரான இரட்சகர் சேசுவுடன் ஒன்றித்திருக்க வேண்டுமென்ற ஆவல் பிலோமினாவின் இருதயத்தில் ஊன்றப்பட்டது. அவருக்குப் பதினொரு வயதானபோது அவர் சேசுவுக்காக எப்போதும் கன்னியாயிருப்பேன் என அவருக்கு வாக்குக் கொடுத்தார்.
பிலோமினாவின் பதின்மூன்றாம் வயது தொடங்கியது. அது வரையிலும் அவர் வீட்டிலும், அவர் தந்தையின் இராச்சியத்திலும் குடிகொண்டிருந்த கிறீஸ்துவின் சமாதானம், கர்வமும், வலிமையும் கொண்ட தியோக்ளேஷியன் சக்கரவர்த்தியால் கலைந்தது. அவன் பிலோமினாவின் குடும்பத்திற்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தான். புனிதையின் தந்தை தன்னுடைய குறைந்த பலத்தை உணர்ந்து, சக்கரவர்த்தியுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொள்வதற்காக, உரோமை நகருக்குச் செல்லத் தீர்மானித்தார். பிலோமினாவின் மீது அவர் தந்தை எவ்வளவு கனிந்த அன்பு கொண்டிருந்தாரென்றால் மகளைக் காணாமல் ஒரு மணி நேரம் அவரால் இருக்க முடியாது. ஆதலால் பிலோமினாவும் இப்பயணத்தில் அவருடன் சென்றார். அவளின் தாயும் வீட்டில் தனியே இருப்பதைவிட அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். உரோமையில் வந்து சேர்ந்ததும் பிலோமினாவின் தந்தை அந்தக் கொடுங்கோலனின் பேட்டிக்கு விண்ணப்பித்தார். அது கிடைத்ததும் பிலோமினாவையும் அவரின் தாயையும் செசார்களின் அரண்மனைக்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். சக்கரவர்த்தியுடன் பேட்டியின்போது புனிதையின் தந்தை தம் காரணங்களை எடுத்துக் கூறினார். யுத்தப் பிரகடனத்தின் அநீதியையும் சுட்டிக் காட்டினார். முழுநேரமும் சக்கரவர்த்தி பிலோமினாவைப் பார்த்த பார்வையாகவே இருந்தான். அவன் அவளின் தந்தையை இடைமறித்து இவ்வாறு கூறினான்.
இதற்குமேல் நீர் சஞ்சலப்பட வேண்டாம். நீர் அமைதியடைந்திருக்கலாம். உம்முடைய பாதுகாப்பிற்காக உரோமைப் பேரரசின் எல்லாப் படைகளுமே தரப்படும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை : உம் மகள் பிலோமினாவை எனக்கு மனைவியாகத் தரவேண்டும் என்று கூறினான்.
பிலோமினாவின் தந்தை எதிர்பாராத இந்த மகிமையால் கவரப் பட்டு அந்த நிபந்தனையை அந்த இடத்திலேயே ஏற்றார். மீண்டும் உறைவிடம் திரும்பியதும் அவளின் பெற்றோர் தியோக்ளேஷியனுடைய விருப்பத்தை பிலோமினா ஏற்கும்படி எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.
ஆனால் பிலோமினாவோ ஒரு விநாடி தயக்கமின்றி அதை மறுத்தார். அவர் தன் தந்தையிடம் “ஒரு மனிதனின் அன்பிற்காக சேசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற வேண்டும் என்கிறீர்களா? என் பதினோராவது வயதில் சேசுவுக்கு என்னை வாக்களித்தேன். என் கன்னிமை அவருக்குச் சொந்தமானது. அதை மாற்றமுடியாது'' என்று சொன்னார். அப்படிப்பட்ட வாக்குறுதியைக் கொடுக்க உனக்கு வயது பற்றாது. நீ என் மகளாயிருப்பதால் நீ விரும்பியபடி நடக்க உரிமை கிடையாது என்று தம் அதிகாரத்தையெல்லாம் காட்டி பிலோமினாவை அச்சுறுத்தி அரசனின் விருப்பத்தை ஏற்கும்படி வலியுறுத்தினார் அவரின் தந்தை. ஆனால் அவரின் தெய்வீக மணாளர் சேசு அவரின் தீர்மானத்தில் உறுதியாயிருக்க புனிதைக்கு பலத்தையளித்தார். அவள் தாய் அவளை சீராட்டிய படி, அவள் தந்தை மேலும் தன் மேலும் தங்கள் நாட்டின் மேலும் இரக்கம் கொள்ளும்படி கெஞ்சிக் கேட்டாள்.
தொடர்ந்து பிலோமினா கடவுளே என் தந்தை என்றும், மோட்சமே என் தாய் என்றும் பதில் கூறினார்.
விஷயமறிந்த தியோக்கிளேஷியன் அவளைத் தன்னிடம் அனுப்பக் கட்டளையிட்டான். அவள் தந்தை அவளிடம் வந்தார். பிலோமினா தீர்மானத்தில்
தான் உறுதியாயிருந்ததைக் கண்டு, அவரும், அவர் தாயும் பிலோமினாவின் கால்களில் விழுந்து மன்றாடினார்கள். “மகளே, உன்னைப் பெற்ற எங்கள் மேல் இரக்கம் காட்டு. நம் நாட்டின் மீதும் இராட்சியத்தின் மீதும் இரக்கம் கொள்'' என்றார்கள். அதற்கு அவள் “கடவுளும் என் கன்னிமையையும் தான் முதலில், என் நாடும் இராச்சியமும் மோட்சமே'' என்று பதில் கூறினாள். அவள் பெற்றோருக்கு நம்பிக்கையற்று விடவே, அவளை அரசனிடம் கூட்டிச் சென்றனர்.
முதலில் தியோக்ளேஷியன் பிலோமினாவை மிகப் பரிவுடனும், மதிப்புடனும் வரவேற்று, தன் கோரிக்கைக்கு இணங்குவதாக அவள் வாக்களிக்கும்படி கேட்டான். அவளோ அப்படிச் செய்யவில்லை. அவள் முழு உறுதியுடன் இருப்பதைக் கண்ட அவன் தன் விருப்பம் நிறைவேறாது என்று உணர்ந்து அவளை அச்சுறுத்த ஆரம்பித்தான். அதிலும் பிலோமினாவை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. அதனால் கோப வெறி கொண்டு பசாசால் ஏவப்பட்டு கர்ஜித்தபடி அவளைப் பயமுறுத்தி முழங்கினான்.
“என்னைக் காதலனாக நீ ஏற்க மறுத்தால் நான் உனக்கு கொடுங்கோலனாக மாறுவேன்'' என்றான். அதற்கு அவள்,
“காதலனாக உன்னை ஏற்கமாட்டேன். கொடுங்கோலனாகக் கண்டு பயப்படவுமாட்டேன்'' என்றாள்.
சக்கரவர்த்தியின் கோபம் காணக்கூடியதாகத் தெறித்தது. அரச மாளிகையில் ஆயுதக்கிடங்கின் அடியிலுள்ள பாதாளச் சிறையில் அவளை அடைக்கக் கட்டளையிட்டான். அவள் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டார்கள். ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் ரொட்டியும் தண்ணீரும் தந்தார்கள். தன் கோரிக்கையைப் புதுப்பிக்க தியோக்ளேஷியனே தினமும் சிறைக்கு வந்தான். ஆனால் பிலோமினாவின் தெய்வீக மணாளர் சேசு அவளை காப்பாற்றி வந்தார்.
அவள் சேசுவிடமும் அவரின் மிகப் பெரிய அன்னையிடமும் தன்னை ஒப்புவித்து மன்றாட அவள் ஒருபோதும் மறக்கவில்லை.
முப்பத்தாறாவது நாளில் மிகவும் பரிசுத்த கன்னிகை தன் கரத்தில் சேசு பாலனோடு, பரலோக ஒளி சூழ, பிலோமினாவிற்கு காணப்பட்டார்கள். “மகளே நீ இன்னும் மூன்றே தினங்கள் இச்சிறையில் இருப்பாய். அதன்பின் உன் சிறைவாசத்தின் 40-ம் நாளில் நீ இந்தத் துயர இடத்தை விட்டு வெளியேறுவாய்'' என்று கூறினார்கள்.
இந்த வார்த்தைகளினால் பிலோமினா மகிழ்ச்சியால் நிரம்பினாள். ஆனால் மாதா தொடர்ந்து: “நீ இச்சிறையை விட்டு வெளியேறும்போது ஒரு மகா குரூர வாதனையுள்ள போராட்டத்திற்கு என் குமாரனின் நிமித்தம் உட்படுவாய்"' என்று கூறவும், அவள் நடுநடுங்கி மரண அவஸ்தைப் பட்டாள். அப்போது மோட்ச இராக்கினி அவளுக்குத் திடம் தந்து இவ்வாறு கூறினார்கள். “என் மகளே, மற்றெல்லாரையும் விட நீ எனக்கு அதிக அருமையானவளாயிருக்கிறாய். நீ என் பெயரையும், என் குமாரனின் பெயரையும் தாங்கி இருக்கிறாய். நீ லூமினா என்று அழைக்கப்படுகிறாய். என் குமாரனே ஒளியென்றும், சூரியனென்றும், நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறார், நானோ, உதய காலை, நட்சத்திரம், சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறேன். இந்நேரம் உன்னைத் தாழ்த்தி வைக்கிற மனித பலவீனத்தின் நேரமாயிருக்கிறது. ஆனால் உனக்கு உதவி செய்யும் வரப்பிரசாதத்தின் திடம் வரும். மேலும் உன்னைக் காவல்புரியும் சம்மனசானவரும், அதிதூதர் அர்ச். கபிரியேல் சம்மனசானவரும் உன்னைப் பாதுகாப்பார்கள். கபிரியேல் என்ற அவருடைய பெயரின் பொருள் சர்வேசுரனுடைய வலிமை என்பது. இவரே பூமியில் எனக்கு பாதுகாப்பாளராக இருந்தார். என் எல்லாக் குமாரத்திகளிலும் எனக்கு அதிக அன்புள்ள மகளாகிய உனக்கு உதவி செய்ய அவரை நான் அனுப்புவேன். வெற்றி பெறுவாய்"' என்று கூறினார்கள். இவ்வார்த்தைகள் பிலோமினாவிற்கு தைரியமூட்டின. மாதாவின் காட்சி மறைந்தது. அந்தச் சிறை முழுவதும் ஒரு நறுமணம் பரவியது. அது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.
கடைசியாக, தியோக்ளேஷியன் அவளின் தீர்மானத்தை அவனால் மாற்றமுடியாது என்பதை உணர்ந்துகொண்டதும், பிலோமினாவை வாதைப்படுத்தவும், அச்சுறுத்தவும் முடிவெடுத்தான். அவ்வகையாய் அவளின் தெய்வீக மணாளருக்கு அவள் கொடுத்திருந்த கன்னிமை வாக்குறுதியை அவள் திரும்பப் பெறவேண்டுமென முயற்சித்தான். அவன் அவளைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, அவனுடைய பல ராணுவ அதிகாரிகள், அரண்மனை உத்யோகஸ்தர்கள் முன்னிலையில் இவள் சக்கரவர்த்தியாகிய என்னைத் தெரிந்து கொள்ளாமல், தன் ஜனத்தாலேயே மரணத் தீர்ப்பிடப் பட்ட ஒரு குற்றவாளியைத் தெரிந்து கொண்டதால், என் நீதி அவனைப் போலவே இவளையும் நடத்தத் தகுதியாயிருக்கிறாள் என்று கூறி அவள் துகிலுரியப்பட்டு கசையடி கொடுக்கப்பட தீர்ப்பிட்டான். காவலர்கள் பிலோமினாவின் துகிலை முழுவதும் அகற்றத் தயங்கினார்கள். ஆனால் ஒரு தூணில் அவளைக் கட்டி வைத்து வலுவாக கொடூரமாய் கசைகளால் அடித்தார்கள்.
பிலோமினாவின் உடலெல்லாம் காயங்களாலும், இரத்தத்தாலும் மூடப்பட்டிருந்ததை மன்னன் கண்டான். அவள் உயிர் ஊசலாடியது. அவளை மீண்டும் சிறையில் அடைத்து, அங்கே அவள் சாகவிடப்படும்படி ஆணையிட்டான். அங்கே அவள் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தபோது இரண்டு சம்மனசுக்கள் வந்து ஒரு மேலான பரிமளத்தை அவள் காயங்களில் வார்த்து அவளைக் குணப்படுத்தினார்கள்.
மறுநாள் இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான். நல்ல சுகத்துடனும், அழகுடனும் இருந்த அவளை, இப்படி அனுகூலம் பெற்றது ஜூப்பிட்டர் என்ற தன் தெய்வத்தினால்தான் என்றும், அதன் காரணம் நான் உரோமைச் சக்கரவர்த்தியின் மனைவி ஆகவேண்டும் என்பதுதான் என்றும் கூறி பசாசால் நிரப்பப்பட்டவனாய் அவளுக்கு மிக்க மதிப்பளித்து அசுத்த பாசத்தினால் அவளை சீராட்டி, அவளை அழிவிற்கு இழுக்கப் பார்த்தான். அவள் அசையவில்லை. தன் தெய்வீக மணாளருக்கு தான் வாக்களித்துக் கொடுத்திருந்த இரத்தினமான கன்னிமை என்னும் லீலி மலரைப் பறிக்க பசாசு செய்யும் உபாயமே இது என நிச்சயித்திருந்தாள். இப்போராட்டத்தில் அவளை வலுப்படுத்தியவர் பரிசுத்த ஆவியானவரே.
தியோக்ளேஷியனிடம் விசுவாசத்தின் சார்பாக அவள் கொடுத்த காரணங்களுக்கு அவனால் பதில் சொல்லக்கூட வில்லை. அவற்றை அவன் ஏளனம் செய்துவிட்டு சிங்கம் போல் உறுமிக்கொண்டே அவள் கழுத்தில் ஒரு நங்கூரத்தைக் கட்டி தைபர் நதியில் உடனே எறியப்படும்படி கட்டளையிட்டான். அவ்வாறு அவளுக்கு, ஞாபகமும் அற்றுப் போக எண்ணினான். ஆனால் சேசு சர்வ வல்லமையினால் அக்கொடுங்கோலனும் விக்கிரக ஆராதனைக்காரர்களும் குழப்பமடையும்படி இரண்டு மிக அழகிய சம்மனசுக்களை அனுப்பினார். அவர்கள் அவளை கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்துவிடவே நங்கூரம் தைபர் நதியின் ஆழத்திற்குள் விழுந்து சேற்றால் மூடப்பட்டது. அவள் சம்மனசுக்களின் இறக்கைகளால் ஏந்தப்பட்டு கரை சேர்க்கப்பட்டாள். ஒரு துளித் தண்ணீர் கூட அவள் மேல் படவில்லை. ஜனங்கள் அவள் மகிமையுடன் ஈரம் படாமல் பாதுகாக்கப் பட்டதைப் பார்த்து அச்செய்தியை எங்கும் பரப்பினார்கள். அதனால் அநேகர் சேசு கிறீஸ்துவின் வேதத்திற்கு மனந்திரும்பினார்கள்.
கொடுங்கோலன் கோபமும், மனச்சோர்வும் அடைந்து இதெல்லாம் மாந்திரீகம் என்று கூச்சலிட்டான். பாரவோனை விட கடின சித்தனானான். மேலும் பிலோமினா உரோமை முழுவதும் இழுத்துச் செல்லப்பட்டு அம்புகளால் எய்யப்படக் கட்டளையிட்டான். அவள் அம்புகளால் துளைக்கப்பட்டதை அவன் பார்த்தான். அவள் மரணத்தறுவாயிலிருந்தாள். அவன் அவளை மறுபடியும் குரூரமாய் சிறையில் தள்ளி அங்கே கைவிடப்பட்டவளாய் எவ்வித ஆறுதலின்றி அவள் சாகும்படி விட்டான்.
மறுநாள் காலையில் அவள் இறந்திருப்பாள் என எதிர் பார்த்த அவன் மலர்ச்சியுடன் அவள் நலமே இருந்து கடவுளின் புகழ்ச்சிக்காக சங்கீதங்களைப் பாடியதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். இரவில் சர்வ வல்லபர் அவளுக்கு இனிய உறக்கத்தை தந்து, அவள் சரீரத்தையும் தம் சம்மனசை அனுப்பி ஒரு நறுமண தைலத்தால் பூசச் செய்தார். இதைக் கண்ட மன்னன் குரூர முனிவு கொண்டு அவள் இறக்கும் வரையிலும் அம்புகளால் எய்யும்படி கட்டளையிட்டான். வில்லாளர்கள் வில்களை இழுத்து வளைத்தாலும் அம்புகள் புறப்பட மறுத்தன. அரசனோ அவள் மாயவித்தைக்காரி என்று பிலோமினாவை சபித்தான். மாந்திரீகம் நெருப்புக்கு முன் வலிமையை இழக்கும் என்று கருதி, அந்த அம்புகளை ஒரு சூளையில் பழுக்கக் காய்ச்சி அதன்பின் எய்யும்படி ஏவினான். இந்த வாதையிலிருந்தும் அவள் மணாளர் அவளைக் காப்பாற்றினார். பிலோமினா பரவசமடைந்தாள். அவளை நோக்கி எய்யப்பட்ட அந்த அம்புகள் நடுவழியில் திரும்பி அவைகளை எய்தவர்களையே சென்று தாக்கியதால் ஆறுபேர் மாண்டார்கள். இப்புதிய புதுமையைக் கண்டு மேலும் பலர் மனந்திரும்பினார்கள். ஜனங்கள் தம் வேதத்துக்கு சார்புடையவர்களாயினர். இன்னும் மோசமான விளைவுகள் வரக் கூடும் என்று அஞ்சிய தியோக்ளேஷியன் அதற்குமேல் வேறு எதிலும் ஈடுபடாமல் பிலோமினாவின் மரணத்தை விரைவுபடுத்தும்படி ஒரு ஈட்டியால் அவள் கழுத்தைக் குத்தி ஊடுருவக் கட்டளை கொடுத்தான். அவளின் ஆன்மா மகிமையுடனும், ஜெயசீலத்துடனும் அவளின் மோட்ச மாணாளனிடம் பறந்து சென்றது. அங்கே, அவர், அவளுக்கு கன்னிமையின் மகுடத்தையும், வேதசாட்சியின் குருத்தையும் தந்து மோட்சவாசிகளுள் சிறந்த இடத்தை அவளுக்கு அளித்தார்.
இது நடந்தது ஆகஸ்ட் 10ம் நாள். அன்று வெள்ளிக் கிழமை. நேரம் பிற்பகல் மணி மூன்று - பிலோமினாவின் தெய்வீக மணவாளர் மரணமடைந்த அதே நேரம். இதனால் உன்னதரான தேவன் அவளை முஞ்ஞானோவுக்கு அதே நாளில் இத்தனை மோட்ச உதவிகளுடன் அதன் மகிமை தனிச் சிறப்புடையதாயிருக்கும்படி கொண்டு வந்தார்.
அர்ச். பிலோமினம்மாவின் பெருவிழா ஆகஸ்ட்-11
அர்ச்.பிலோமினம்மாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தொடர்புக்கு
சகோதரர் நேவிஸ் : 8525821634
சகோதரர் ஜுடு:9790123670
ஆமென்

Comments
Post a Comment