மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம்

 



*மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம்*

மைந்தனின் நிந்தை எப்படி மாதாவைப் பாதிக்கிறதோ அதே போல் மாதாவின் நிந்தை மைந்தனை மிகவும் வேதனைப்படுத்துகின்றது. இதனாலேயே சேசு தன் அன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் நிந்தை பரிகாரம் செய்யப்படும்படி கேட்கிறார். 1925-ம் வருடம் டிசம்பர் 10-ம் நாள் பாத்திமா காட்சி பெற்று சகோதரி லூஸியாவுக்கு சேசு தம் அன்னையுடன் தோன்றினார். மாதாவின் வலது கரத்தில் குத்தி ஓடுருவும் முட்களால் சூழப்பட்ட ஓர் இருதயம் இருந்தது. சேசு லூஸியாவுக்கு அந்த இருதயத்தைக் காட்டி. "உன்னுடைய மிகப்புனித அன்னையின் இருதயத்தின் மீது இரக்கப்படு.

நன்றியற்ற மனிதர்கள் அதை ஒவ்வொரு விநாடியும் ஊடுருவக் குத்தும் முட்களால் இது சூழப்பட்டுள்ளது. பரிகார முயற்சி செய்து அம் முட்களை அகற்ற யாருமில்லை'' என்றார். நம் அன்னையின் இருதயத்துக்கு ஆறுதல் தர சேசு எவ்வளவு ஆசிக்கின்றார், என்று இதிலிருந்து நாம் உணர முடியும். இக்காட்சி நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பின் 1926- பெப்ருவரி 15-ம் நாள் சேசு மீண்டும் லூஸியாவுக்குத் தோன்றி என் தாயின் மாசற்ற இருதயப் பக்தியைப் பரப்ப இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது'' என்று கேட்டார். மரியாயின் இருதயத்துக்கு ஆறுதலை தாமதமில்லாமல் செய்ய வேண்டும் என இதனால் சேசு உணர்த்துகிறார். சேசு விரும்பிக் கேட்ட பரிகாரத்தை நாம் கொடுப்போம்.


(1) ஓ எங்கள் அமலோற்பவத் தாயே! உங்களின் அமல உற்பவமே பாவ உலகில் மனிதரின் ஒரே பாக்கியமாக உள்ளது. ஜென்மப் பாவமின்றி உற்பவித்த நீங்கள்தான் பசாசின் தலையை நசுக்கி வெல்ல முடியும். இவ்வுண்மையை மறுத்து உங்களின் அமலோற்பவத்தை மறுக்கும் வகையில் பிதற்றத் துணிந்துள்ளவர்களுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். உங்கள் மாசற்ற இருதயத்தை இவ்வாறு துயரத்துக்குள்ளாக்குவோரின் பாவத்துக்குப் பரிகாரம் செய்து உங்களை வாழ்த்துகிறோம்.

மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!


(2) ஓ எங்கள் கன்னித்தாயே! முப்பொழுதும் பழுதற்ற கன்னிகையே! பதிதக் கொள்கையுடைய சிலர் உங்களுடைய நித்திய புனித கன்னிமைகளுக்குக் களங்கம் கற்பித்து வருகிறார்கள். பேயின் தூதரான சில மனிதர் வாயால் கூறக்கூடாத அளவு இதில் உங்களைப் பழித்து உரைக்கின்றார். மேடையிலும் புத்தகங்களிலும் பத்திரிகையிலும் உங்களது தூய கன்னிமையை இழிவாகப் பேசியும் எழுதியும் சித்தரித்தும் வருகின்றனர். இந்த அவமானத்துக்கு தகுந்த பரிகாரமாக உங்கள் நேசப் பிள்ளைகளாகிய நாங்கள் "பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே'" என்று சத்தியத் திருச்சபையுடனும், எண்ணற்ற புனிதர் சம்மனசுக்களுடனும் உங்களை வாழ்த்திப் போற்றுகிறோம்.

மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!


(3) கடவுளின் தாயாகும் மாபெரும் பேறு பெற்ற மாமரியே! நெஸ்டோரியுஸ் முதல் இன்று வரையிலும் உங்களின் தெய்வத் தாய்மையை மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம். உண்மையாகவே நீங்கள் இறைவனின் அன்னை. எங்களின் தாய் என்று பெருமையுடன் உங்களை அழைத்து, "கிறீஸ்துவின் மாதாவே! தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே! சிருஷ்டிகருடைய மாதாவே!" என்று உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!


(4) மகா அன்புக்குப் பாத்திரமான மாதாவான மாமரியே! கடவுளை எதிர்ப்பவர்கள் உங்களையும் எதிர்க்கிறார்கள், பகைக்கிறார்கள், வெறுக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதோடு நில்லாமல் பிறரையும் விசேஷமாக இளம் உள்ளங்களையும் இத்தீமையில் உட்படுத்துகிறார்கள். மாசற்ற மாமரியைப் பழித்துப் பகைக்கும்படி தூண்டுகிறார்கள். கற்றுத் தருகிறார்கள்! அளவுக்கு மிஞ்சிய இந்த அக்கிரமத்துக்காக உங்களிடம் மன்னிப்பு வேண்டி உங்களை எங்கள் மனமார நேசித்து வாழ்த்தி

வரவேற்கிறோம்.

மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!


(5) தாவீது இராஜாவின் உப்பரிகையான மாமரியே! உங்களின் மீது பேயின் தூதர்களுக்கு எவ்வளவு வெறுப்பென்றால் உங்கள் திரு உருவங்களையும், படங்களையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. உங்களை நினைப்பூட்டும் எந்தப் பொருளும் அவர்களுக்குப் பொருந்தாததாக இருக்கின்றது. திட்டமிட்டு அவைகளை ஆலயங்களிலிருந்தும் பீடங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும், சேத்திரங்கள் பிரசுரங்களிலிருந்தும் அகற்றி வருகிறார்கள். உங்கள் அன்பின் அடையாளமான செபமாலை, உத்தரியம், அற்புத சுரூபம், சபைச்சின்னம் முதலியவற்றை புறக்கணிப்புச் செய்கிறார்கள். இவர்களின் பழிப்புக்கெல்லாம் பரிகாரமாக நாங்கள் உங்கள் உருவங்களையும், படங்களையும், பக்திப் பொருள்களையும், அன்புடன் பாதுகாத்து உபயோகிப்பதால் உங்கள் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்கிறோம்.

மரியாயின் துயரம் நிறைந்த 

மாசற்ற இருதயமே வாழ்க!

https://www.catholictamil.com/2021/01/blog-post_35.html?m=1

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!