கற்பு என் பொக்கிஷம்
பார்வையில் பரிசுத்தம்
ஒரு பட்டணத்தில் தங்கம், வெள்ளி, நகைகள் நிறைந்த ஒரு வீடு இருக்கிறதென்று வைத்துக் கொள் வோம். ஆனால் வீட்டுக்காரன் தன் பொக்கிஷத்தைக் காக்க சிரமமெடுக்காமல் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கிறான். காவலாளி கிடையாது. என்ன நடக்கும்?
கூடிய சீக்கிரம் திருடர்கள் வந்து அந்தப் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இவ்வீட்டுக்காரனைப்போல் புத்தியுள்ளவன் ஒருவனும் இதைச் செய்யமாட்டான். தனக்குப் பெரிய சொத்து இருந்தால், ஓர் அறையில் வைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி பூட்டி, திருடர்கள் களவு செய்யாதபடி காவலாளிகளை நியமிப்பான்.
பொக்கிஷம் நிறைந்தவீடு நீதான். பொக்கிஷம் உன் கற்பு. உன் ஐம்புலன்கள், முக்கியமாய் உன் கண்களே கதவுகளும், ஜன்னல்களும். திருடன் சாவான பாவம். இத்திருடன் உன் கற்பைத் திருட ஆசிக்கிறான்.
உன் கண்களைக் காக்காமல், விருப்பப்படி எல்லாவற்றையும் பார்க்கவிட்டு விட்டால், சாவான பாவம் எளிதாய் உன்னில் பிரவேசித்து உன் கற்பை திருடிக் கொண்டு போய்விடும். ஆகையால் கண்களைக் காக்க வேண்டும். பாவத்திற்கு ஏதுவான காரியங்களைப் பார்க்காதே. அவ்வளவு நல்லதல்லாத எதையும் பார்க்க நேர்ந்தால், உடனே கண்களை அப்பால் திருப்பி வேறு பக்கம் பார்.
இப்புத்திமதி அதிமுக்கியம். அதிலிருக்கிறது சாவோ அல்லது சீவியமோ. நீ பார்வையில் சுத்தமா யிருந்தால் நினைவுகளிலும் செய்கைகளிலும் சுத்தமாயிருப்பாய். ஒரு வாலிபன், பரிசுத்தமாயிருக்க வழி என்ன என்று அர்ச். இஞ்ஞாசியாரைக் கேட்டான். அதற்கு அவர் சொன்ன பதில், "ஒரே ஒரு வழி. அதுவே கண்ணடக்கம்.'' அதாவது நல்லதல்லாத காரியங்களைப் பார்க்க விடாதபடி கண்களைக் காப்பதாம்.
உன் கண்கள் பரிசுத்த அப்பத்தைப் பார்த்தவை. தேவ நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் உன் சர்வேசுரனும் ஆண்டவருமான சேசுவைப் பார்த்தன. இப்பரிசுத்த பார்வை உன் கண்களை அர்ச்சித் திருக்கிறது. நாள் முழுவதும் உன் கண்களின் பார்வைகள் பரிசுத்த அப்பத்துக்குத் தகுதியுள்ளவைகளாக இருக்கக் கடவது.
மேலும் மோட்சத்தில் உன் கண்களே நமது ஆண்டவரைப் பார்க்கப் போகின்றன. அப்பொழுது அவர் நற்கருணைத் திரையில் மறைந்திருக்க மாட்டார். அவரை நேருக்கு நேராகப் பார்க்கலாம். ஆம், உன் கண்கள் சேசுவை நேராகப் பார்க்கும். அவரது திருக்காயங்களைக் கொண்ட கைகளையும், கால்களையும் பார்க்கும். இன்னும் கன்னி மரியாயை , பரலோக இராக்கினியை, பரிசுத்ததனத்தின் சகல மகிமையிலும் அவர்களை உன் கண்கள் தரிசிக்கும். ஆ! சேசுவையும் மரியாயையும் பார்க்கும் உன் கண்கள் எவ்வளவோ பரிசுத்தமாயிருக்க வேண்டும்! ஆகையால் உன் கண்களை பரிசுத்தமாய் வைத்திரு. பார்வையில் பரிசுத்தமாயிரு.
என் கண்கள் பரிசுத்த அப்பத்தைப் பார்த்தவை. மோட்சத்தில் அவை சேசுவையும் மரியாயையும் பார்க்கும். ஆகவே அவை பரிசுத்தமாயிருக்க வேண்டும். நான் என் பார்வையில் பரிசுத்தமாயிருப்பேன் என்று இன்றே உறுதிப் படுத்திக்கொள் அடுத்த நொடிகள் கழித்து என்ன நடக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது அதனால் எப்போதும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் உங்கள் கண்களை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணியுங்கள் அப்போது மோட்சத்தை நீங்கள் எளிதாக அடையலாம்.
ஆமென்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment