இயேசுவின் திருவிலாவை ஈட்டியால் குத்திய புனித லோஞ்சினுஸ்
🌹இவர், கல்வாரி மலையின் மேல் நமதாண்டவரை சிலுவையில் அறைந்த உரோமைப் படைவீரர்களின் நூற்றுவர் தலைவராயிருந்தார். நமதாண்டவரின் திவ்ய திருவிலாவை ஈட்டியால் குத்தியவரும் இவரே. ஆண்டவர் சிலுவையில் மரித்திருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காக, இவர், ஈட்டியால் திரு விலாவைக் குத்தியபோது, இரத்தமும் தண்ணீரும் வெளி வந்தன. அப்பொழுது, நோயினால் மாபெரும் விதமாக உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்த இவருடைய ஒரு கண் ஆண்டவருடைய திவ்ய திரு விலாவிலிருந்து வெளிவந்த திரு இரத்தமும் திருத் தண்ணீரும் பட்டவுடன் புதுமையாக அக்கணமே, குணமானது. உடனே இவர் மனந்திரும்பினார். இவர், நமதாண்டவரை, மெய்யாகவே சர்வேசுரனுடைய குமாரன்(மத்.27:54) என்று அறிவித்த முதல் உரோமைக் குடிமகனும் வீரனும் ஆனார்.
நமதாண்டவரான திவ்ய இரட்சகர் மெய்யாகவே உத்தானமானார் என்கிற விசுவாச சத்தியத்திற்கு இவர் சாட்சியாகவும் திகழ்ந்தார். அப்போஸ்தலர்கள் இருட்டின சமயத்தில் வந்து ஆண்டவருடைய திவ்ய சரீரத்தை கல்லறையிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர் என்கிற பொய்யான வதந்தியை உரோமை வீரர்களுக்கு பணம் கொடுத்து, யூதர்கள் பரப்பினர்.ஆனால் லோஞ்சினுஸ், யூதர்களுடைய தந்திர சூழ்ச்சியை முறியடிக்கும்படியாக, இவர் ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை துணிவுடன் எடுத்துரைத்தார். இதை சகிக்காத யூதர்கள், இவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
பெந்தேகோஸ்தே திருநாளுக்குப் பின், இவரும் திரளான சக வீரர்களுடன் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றார். மேலும், கப்பதோசியா, துருக்கி ஆகிய இடங்களுக்குச் சென்று சுவிசேஷத்தைப் போதித்தார். அநேகரை மனந்திருப்பி கிறீஸ்துவ வேதத்தில் சேர்த்தார்.
இவர், கி.பி.45ம் வருடம் அஞ்ஞான விக்கிரக சிலைகளை வழிபட மறுத்ததால், இவர் தலைவெட்டி வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். மாந்துவா நகரத்தில் இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இந்நகரத்தின் பாதுகாவலராக இவர் விளங்குகின்றார்.
உரோமையிலுள்ள அர்ச்.இராயப்பர் தேவாலயத்திற்கு முன்பாக இருக்கிற சுரூப மாடங்களில் ஒன்றில் இவருடைய சுரூபமும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இதை ஜியான் லொரேன்ஸோ பெர்னினி என்பவர் செதுக்கினார். திவ்ய இரட்சகருடைய திவ்ய திரு இருதயத்தை ஊடுருவிக் குத்திய பரிசுத்த ஈட்டியின் ஒரு நுனிப் பாகமும், அர்ச்.இராயப்பர் தேவாலயத்தில் பாதுகாப்பாக ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது.🌹✝️
🌹அர்ச்.லோஞ்சினுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

Comments
Post a Comment