உண்மையான பக்தியின் விளக்கம் -அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார்

 


பக்தியுள்ள ஆன்மாவே, உண்மையான பக்தி கடவுளுக்கு எவ்வளவு விருப்பமானதென்பதை உன் கிறீஸ்தவ விசுவாசம் உனக்குப் போதிப்பதால், பக்திநெறியில் ஒழுக நீ ஆவலாயிருக்கிறாய். ஏதேனும் ஓர் அலுவவைத் தொடங்கும்பொழுது முதன்முதல் ஏற்படும் சிறு பிழைகளைத் தொடக்கத்திலேயே திருத்தாவிடில், பிழைகள் பெருகிப் பெருகி இறுதியில் அவற்றைத் தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படுவது இயல்பு. ஆகவே பக்தி என்னும் புண்ணியம் என்ன என்பதை முதன்முதல் நீ அறிந்துகொள்ள வேண்டும். உண்மையான பக்தி ஒன்றே ஒன்றுதான்: 


போலிப் பக்திகள் எண்ணிலடங்காது. எனவே, உண்மையான பக்தியைப் பகுத்தறி யாமல், முறைகேடான குருட்டு நம்பிக்கைகளில் சிக்கி விட நேர்ந் தால் வீணில் ஏமாற்றமடைவாய்.எத்தனையோ பேர் தத்தம் நாட்டங் களுக்கும் விருப்பங்களுக்கும் தக்கவாறு பக்தியைச் சித்தரித்துக் கொள்கிறார்கள்.

 உபவாசமிருந்து பழகியவன், உபவாசம் செய்யும் போது தான் பக்தியுள்ளவன் என்று எண்ணிக்கொள்கிறான். ஆனால் தன் உள்ளத்தில் நிறைந்து கிடக்கும் பழியுணர்ச்சிகளைப் பற்றிக் கவலையற்றவனாகவே இருப்பான்.

 உபவாசத்தை நுணுக்கமாக அனுசரிக்கும்பொருட்டு, ஒரு சிறிது தண்ணீர் முதலாய் அருந்த மாட்டான். ஆனாலும் பொய், புறணி, பொறாமைப் பேச்சுக்களால் தன் உறவுகளையும், அயலானின் இரத்தத்தையே உறிஞ்சிவிட அஞ்சமாட்டான்.

 வேறொருவன் நாள்தோறும் ஏராளமான ஜெபங்களை முணுமுணுப்பதால், தான் மிகுந்த பக்திமான் என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் தன் ஊழியர்களையும், அயலாரையும் திட்டி. இகழ்ந்து, வம்பு வளர்க்கத் தயங்க மாட்டான்.

 இன்னொருவன் ஏழைக்குப் பெருமனதுடன் பிச்சை கொடுப்பான். ஆனால் தன் எதிரிக்குச் சிறிது இரக்கங்காட்ட அவனுக்கு மனம் வராது. மற்றொருவன் தன் எதிரிக்கு மன்னிப்பளிக்க முன்வருவான். ஆனால் நீதிமன்றத்தில் வற்புறுத்தப்பட்டாலன்றித் தான் வாங்கின கடனைத் தீர்க்க மாட்டான். இத்தகையோர் பக்திமான்களெனக் கருதப்படுகிறார்கள். ஆனால் இவர்களிடத்தில் உண்மையான பக்தி என்பது சிறிதளவும் இல்லை.


சவுல் அரசனின் ஏவலாட்கள் தாவீதைத் தேடி அவருடைய வீட்டுக்குச் சென்றார்கள். அப்போது அவர் மனைவி மிகரேசுல் தாவீதின் படுக்கையில் ஒரு சிலையைக் கிடத்தி, தாவீதின் ஆடைகளையே அந்தச் சிலைக்கு அணிவித்து, தாவீது படுத்திருக்கிறாரென்று அவர்களை நம்புமாறு செய்தாள். இவ்வாறே சிலர் பக்திக்கடுத்த சில புறச்செயல்களைச் செய்வதால் தாங்கள் பக்திமான்கள்தான் என்று உலகத்தை நம்புமாறு செய்கிறார்கள். ஆனால் உண்மையாகவே இவர்கள் வெறும் போலி பக்தர்களும், வேடதாரிகளுமே ஆவர்.


பக்தியுள்ள ஆன்மாவே, உயிருள்ள உண்மையான பக்தி கடவுளின் பேரில் ஆன்மா கொண்டிருக்கும் அன்பில் அடங்கியிருக்கிறது. அரைகுறையான அன்பு பக்தியன்று. உறுதியான முழு அன்பே பக்தியாகும். தெய்வீக அன்பு ஆன்மாவை அழகு செய்து, அதைக் கடவுளுக்கு ஏற்புடையதாக ஆக்கும்பொழுது, அந்த அன்பை வரப்பிரசாதம் என்கிறோம். நற்கிரியைகளைச் செய்யும்பொருட்டு நமக்கு ஆற்றலைத் தரும் நேசத்தை தேவசிநேகம் என்கிறோம். நற்செயல்களைச் செய்வதோடு மட்டும் நில்லாது, கவனமாகவும், பெருந்தன்மையாகவும் அடிக்கடி அவற்றைச் செய்யுமளவு நாம் புண்ணியப் பயிற்சி பெறும்பொழுது, அதை நாம் பக்தி என்கிறோம்.

அர்ச்‌.பிரான்ஸிஸ் சலேசியார்.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.





Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!