நற்கருணையை நாவில்தான் வாங்க வேண்டும் என்பது ஒரு பெரும் முழக்கமாக, பேரியக்கமாக உருப்பெற வேண்டும். வளர வேண்டும்.


“நற்கருணையில் மெய்யாகவே இயேசு ஜீவிக்கிறார், என்ற நம்பிக்கை கிறிஸ்த்துவத்தின் உன்னதமான உண்மை. குருவானவர் வசிகரம் செய்யும் அப்பமும் இரசமும், மகத்தான விதமாக இயேசுவின் திருஉடலும் இரத்தமுமாக மாறுகிறது. இயேசுவே இம்மாற்றத்தைக் கொண்டு வருகிறார். இதில் குருவானவர் ஒரு கருவிதான்." என்கிறார் தந்தை ரெஜிஸ் ஸ்கேலன். இவர் அன்னை தெரேசா சபையினரின் ஆன்ம குரு- இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும்தான் நற்கருணை என்பதால், அவர்கு தக்க வணக்கமும் மரியாதையும் செலுத்தப்பட வேண்டும்.

தொடக்க காலத்தில், நற்கருணை கையில்தான் வழங்கப்பட்டது. வேத கலாபனையின் காலத்தில், சிறைப்பட்டோருக்கும், நோயுற்றோருக்கும், மறைந்து வாழ்ந்த திருச்சபைக்கும் நற்கருணை வழங்கப்பட வேண்டுமென்பதால், தகுதி வாய்ந்த திருத்தொண்டர்கள் இந்த சேவையில் பங்கு கொண்டனர். நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்த்து இறைமகனல்ல என்ற “தவறான பிரச்சாரத்தை திருச்சபையின் எதிரிகள் மேற் கொண்டனர், ஆதலால் நற்கருணையைக் கையில் வாங்குவது தவறல்ல என்று போதிக்கலாயினர். இதனால் பல தவறுகள் நிகழ்ந்தன. சிலர் நற்கருணையைக் கையில் பெற்றுக் கொண்டு, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். சாத்தானின் வழிபாடுகளில் வைத்து நிந்தைக்குள்ளாக்கினர். திருத்தந்தை மகான் லியோ கி.பி. 440-ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்தவர். "நாம் விசுவாசத்துடன் வணங்குபவரை நமது வாயில்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்" என அறிக்கையிட்டார்". நற்கருணையைக் கையில் வாங்குவது பெரும் தவறு" என புனித பேசில் கண்டனம் எழுப்பினார். "திவ்விய நற்கருணையைத் தொட்டு எடுத்து விசுவாசிகளுக்கு வழங்குவது அபிஷேகம் செய்யப்பட்ட குருவின் கரங்களுக்கே உரிமையானது" என்றார் புளித தாமஸ் அக்யூனாஸ். கி.பி. 878ல் பிரான்சிலுள்ள நவன்நகரில் கூடிய மாமன்றம் நற்கருணையை நாக்கில்தான் வாங்க வேண்டுமென முடிவெடுத்தது.



பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் பகுத்தறிவு வாதம் தலை தூக்கியது. அப்பமும் இரசமும் வாழ்வுதரும் நலப் பொருட்கள். ஆனால் அவற்றை பலி பீடத்தில் வைத்து குரு வசிகரம் செய்யும்போது, அதில் எத்தகைய மாற்றமும் நிகழ்வதில்லை. அதனைக் கையில் வாங்குவதில் ஏதுமில்லை என்று பிரிவினை வாதிகள் மக்களை மூளைச்சலவை செய்தனர். இத்தகைய தேவ அவமதிப்புகளை முறியடிக்க இத்தாலியின் ட்ரென்ட் நகரில் 1545 இல் சமய விற்பன்னர் மன்றம் கூடியது. திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் தலைமை தாங்கினார். ஆறு ஆண்டுகள் கலந்தாய்வுகள் நிகழ்ந்தன. திவ்விய நற்கருணைக்கு எதிராகப் பரப்பப்பட்ட பதினொன்று வகையான தேவ தூஷணங்களும் வெறுக்கத் தக்கவை, கண்டனத்துக்குரியவை, சபிக்கப்பட்டவை, என பேரவை பிரகடனம் செய்தது, வசீகரிக்கப்பட்ட திருஅப்பம் திருச்சபைக்கே சொந்தம். அதைத் தாங்கும் கிண்ணம் அர்ச்சிக்கப்பட்டது. அதிலிருந்து வணக்கத்துக்குரிய திரு அப்பத்தை எடுத்து விசுவாசிகளுக்கு வழங்க அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர் மட்டுமே தகுதி பெற்றவர். “குழந்தை பாலை குடிக்க தன் தாயின் மார்பகத்தை நோக்கி வாயைத் திறப்பது போலும், கூட்டிலுள்ள பறவைக்குஞ்சு இரையைப் பெற்றுக் கொள்ள தாயிடம் தன் வாயைத் திறப்பது போலும் விசுவாசிகளும் தங்கள் தலையை நிமிர்த்தி திவ்விய நற்கருணையை நாவிலே பெற்றுக்கொள்ள வேண்டும். தகுந்த மரியாதையும் வணக்கமும் செலுத்தாமல் எவரும் நற்கருணையை உட்கொள்ளக் கூடாது. தவறினால் அது பெரும் பாவம் என்றார் அர்ச்.அகுஸ்தினார். ஆலோசனை சபை அளித்த விளக்கங்கள் மக்களைத் தெளிவு படுத்தின, திடப்படுத்தின. 

இன்றைய கால கட்டத்தில் திவ்விய நற்கருணைக்கு அவமரியாதையைக் கொண்டுவர முயல்வது பதிதர்களும் அல்ல. பிரிவினை சபையினரும் அல்ல. நாமே நமக்குக் குழியைத் தோண்டிக் கொள்கிறோம். திருச்சபையின் பாதுகாவலர்கள் எனக் கருதப்பட்ட நாடுகளிடமிருந்தே சவால்கள் எழுகின்றன. குதற்கமாக சிந்திக்கத் தொடங்கி விட்டனர். திருச்சபையின் போதனைகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதா, சிலவற்றை ஒதுக்கி விடலாமா, அல்லது முழுமையுமே தள்ளி வைத்துவிடலாமா என்றெல்லாம் தாறுமாறான கற்பனைகள். இதைக் கண்டுணர்ந்த திருத்தந்தை பத்தாம் பத்திநாதர், மனிதசக்தியால் சாத்தானின் சூழ்ச்சிகளை வெல்வது கடினமெனக் கண்டார். நற்கருணை பக்தியை வலுப்படுத்தினார். இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்கு நற்கருணை அருள்சாதனம் வழங்க முடிவெடுத்தார். இதனிடையே அமெரிக்கா, பெல்ஜியம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், சில ஆயர்களும் மக்களும் நற்கருணையை கையில் பெற்றுக்கொள்ளும் உரிமை வேண்டுமெனத் திருத்தந்தையிடம் விண்ணப்பம் வைத்தனர். திருத்தந்தை ஆறாம் சின்னப்பர், 1969 ம் ஆண்டு உலமெங்கிலும் உள்ள ஆயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். பெரும்பாலான ஆயர்கள் இதற்கு ஆதரவு தரவில்லை. இருப்பினும் திருத்தந்தை அவர்கள், பெரும் தயக்கத்துடன் ஒரு சில நாடுகளுக்கு அனுமதி வழங்கினார். இந்த சலுகை தவறாக பயன்படுத்தினால், எக்கணமும் அது திரும்பப் பெறப்படும் என எச்சரித்தார். இருப்பினும் நற்கருணையைக் கையில் வாங்கும் பழக்கம் தொற்று நோயென உலகெங்கும் பரவிவிட்டது.

நற்கருணை மீதான அவமரியாதைகள் தொடர்ந்து நடந்தன. மக்களின் விசுவாசத்தை அழித்தொழிக்க நற்கருணைக்கு நிந்தை வருவிப்பதை ஒரு கருவியாகத் திருச்சபையின் எதிரிகள் பயன்படுத்துகின்றனர். ஆலய பலிபீடத்தின் நடுநாயகமாக விளங்கிய நற்கருணை ஓரங்கட்டப் பட்டது. மண்டியிட்டு, கரங்குவித்து, தலை வணங்கி பக்தியோடு நற்கருணை வாங்க பயன்பட்ட கிராதிகள் புழுதி படிந்து போயின. பயனற்றும் போனது. திருவிருந்தின்போது, ஆலயத்தின் நடுவிலே நீண்ட வரிசை நிற்பவர்கள் நகர்ந்து, குருவின் அருகில் வந்து தலையை ஆட்டி, இடது கையை நீட்டி, நன்மையை வாங்கி அதை வலது கையால் எடுத்து வாயில் போட்டுக் கொள்வது வழக்கமாகிவிட்டது, மற்றவர் கொடுக்கும் பொருளை இடது கையில் வாங்குவது மரியாதைக் குறைவு எனக் கருதும் நம் சமுதாயம். திவ்விய நற்கருணையை மட்டும் இடது கையில் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டாதது வியப்பைத் தருகிறது. வலியை வருவிக்கிறது. நற்கருணையிலிருந்து துகள்கள் கீழே சிந்தாமல் தடுக்க தட்டைப் பிடித்திருக்கும் பீடச்சிறுவன் தடுமாறுகிறான். தட்டை குருவின் கைக்குப் பிடிப்பதா அல்லது நற்கருணையைக் கையில் தாங்கியிருக்கும் விசுவாசிக்குப் பிடிப்பதா. எந்தக் கட்டம்வரை அங்கு நிற்பது? குழம்பிப் போகிறான். இதனிடையே குருவானவர் நகர்ந்து செல்கிறார். நற்கருணை கீழே விழுந்ததா, தவறாக பயன்படுத்தப்பட்டதா, இவற்றையெல்லாம் குரு நின்று கவனிக்க முடியாது. தடுக்க முடியாது.

அன்னை தெரேசா கூறுகிறார் "இன்றைக்கு, உலகில் நிலவும் மிகவும் மோசமான பிரச்சனை என்ன தெரியுமா? நான் உலகின் பல பகுதிகளுக்குச் செல்லும்போதும், என்னை மிகவும் துக்கத்துக்குள்ளாக்குவது என்ன தெரியுமா?நற்கருணையை மக்கள் கையில் பெற்றுக் கொள்வது.மக்களே இந்தச் செயலைத் தடுக்க முயலும்.அனைவர் மீதும் கடவுள் ஆசீர் பெருகட்டும். அன்னையின் ஆசியுடன் நற்கருணையை நாவில்தான் வாங்க வேண்டும் என்பது ஒரு பெரும் முழக்கமாக, பேரியக்கமாக உருப்பெற வேண்டும். வளர வேண்டும். நற்கருணையில் வாழ்பவர், அதிசயங்கள் செய்பவர், அற்புதங்கள் நிகழ்த்துபவர், குணமளிப்பவர். மலையினும் மிகுதியான நம்பிக்கையை அவர் மீது வைப்போம். விசுவாசத்துடன் நமது நாவிலேயே பெற்றுக்கொள்ள வோம்.


S.தார்சியுஸ் 

புதுவை

சர்வவியாபி என்ற பத்திரிக்கையின் கட்டுரை.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!