உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்.

 


 *ஏழைகள் தாங்கள் படுகிற துன்ப துயரங்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுப்பது மிகச் சிறந்த புண்ணியம்*  

1250 ஆம் ஆண்டில் புனித துறுதோன்  என்கிறவர் ஒரு மடத்தில் துறவியாக இருந்தார்.மிகுந்த புண்ணிய ஆத்துமாவான அவர், மரணம் அடைந்த பிறகு  அம்மடத்தின் அதிபர் ஒருநாள் தியானத்தில் இருக்கிறபோது அவருக்குத் தோன்றினார். இரவு நேரம் பார்த்த அக்காட்சியில்  துறவியின் ஆத்துமத்தைச் சுற்றி எரிகிற நெருப்புச் சுவாலையோடு அத்துறவி மடத்தின் அதிபரிடம், "நீர் என் பேரில் இரக்கம் வையும்” என்று கதறி மன்றாடினார். மடத்தின் அதிபர், அவர் படும் வேதனையைக் கண்டு மிகவும் இரக்கம் கொண்டவராய், "நீர் அனுபவிக்கிற வேதனை சீக்கிரம் முடியும்படிக்கு நானும், பலவகைப் புண்ணியங்களைச் செய்து உமக்கு உதவுவோம் என்று உறுதியளித்தார். அதற்கு அந்தத் துறவியோ அளவில்லாத தயையுடைய இறைவனின் சித்தப்படி என் வேதனை சீக்கிரமாய் முடிவதற்கு ஒரு பிச்சைக்காரப் பெண்ணின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது.  

அவள் யாரெனில், இந்த நகருக்கு வெளியே ஒரு சின்னக் குடிசையில் இருக்கிறாள் என்று அவர் குறிப்பிட்ட பெண் வாழும் இடத்தையும் சொல்லி மறைந்தார். மறுநாள் விடியற்காலைாயில் மடத்தின் அதிபர் துறவி துறுதோனின் ஆன்மா குறிப்பிட்ட இடத்துக்குப் போய் அவர் சொன்ன அடையாளங்களைக் கொண்டு ஒரு சின்ன குடிசைக்குள் பருத்தி நூற்கிற அந்தப் பிச்சைக்காரியைக் கண்டார். அவளைப் பார்த்து, "நீர் யார்? என்ன தபசு, என்ன புண்ணியம் செய்கிறாய்?" என்று ஆச்சரியத்தோடு கேட்க, அவளுக்கும் ஏதும் புரியவில்லை. ஆனாலும் அவள் தன்னைப் பற்றிச் சொன்னாள்.'என் கணவர் இந்த ஊரில்  இருக்கும் குடிகாரர்களையெல்லாம்விட பெரிய குடிகாரன். அவர் தினமும்  சாராயம் குடித்து வெறி வந்த பிறகு வீட்டுக்கு வருவார். வந்ததும் வராததுமாய்  எவ்வளவு மோசமாக ஒரு மனிதன் திட்ட முடியுமோ, அப்படி என்னைத்  திட்டுவதுமல்லாமல், பெரிய தடி ஒன்றினால் என்னை நன்றாய் அடிப்பார். அந்நேரம் பொறுமையோடு, ஒன்றும் பேசாமலும்,கோபித்துக் கொள்ளாமலும்  இருந்தாலும், என்னை அடிப்பதை  நிறுத்தாமல், தான் களைத்துப் போகும்வரை பெரும் கோபத்தோடும், வெறியோடும் ஒரு  பாம்பை அடிப்பதைப் போல என்னை  அடிப்பார். நான் அவ்விதம் அடிவாங்கும்  சமயத்தில் ஆண்டவர் இயேசு பட்ட அடிகளினால் அவர் அனுபவித்த வேதனையை நினைத்துப் பொறுமையோடிருந்து, அவற்றை பாவத்துக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். ரொம்ப வருடங்களாக இப்படித்தான் தினமும் என் நிலைமை இருக்கிறது. நானும்  பொறுமை  யோடு இப்படித்தான் செய்து  வருகிறேன்" என்றாள்.   

இந்தச் செய்திகளைக் கேட்ட மடத்தின் அதிபர் ஆச்சரியப்பட்டவராய், தன்னுடைய  வேண்டுகோளை அப்பெண்ணிடம் சொன்னார். “அம்மா, உன் துன்பத்தால்  உன்னுடைய பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும் வலிகளையும், எங்கள்  மடத்தில் மரணம் அடைந்த குருவானவர் ஒருவரின் ஆத்துமத்துக்காக ஒப்புக்கொடு” என்றார். அப்பெண்ணும் அவர்  வேண்டுதலுக்கு உடனே சம்மதித்தார். அன்று மாலை நேரம். அவளுடைய  குடிகாரக் கணவன் வீடு திரும்பி, அதிகமாய்க் குடித்த சாராய போதை வெறியால் மனைவியை முன்னைவிட மோசமாக, கடுமையாக அவளை அடித்தான். அவள் அடிபடுகிறபோது ஆண்டவர் இயேசு பட்ட பாடுகளை நினைத்து பொறுமையோடு இருந்ததுமல்லாமல், அந்த  வேதனையை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவிக்கிற மடத்தின் துறவியாரின் விரைவான ஆன்ம மீட்புக்காக ஒப்புக்கொடுத்தாள். 

அன்றிரவே துறவி துறுதோன் மடத்தின் அதிபருக்கு ஒளி வெள்ளத்துக்கு நடுவே தோன்றி, "அந்தப் புண்ணியவதி என் ஆத்துமத்துக்காக ஒப்புக்கொடுத்த புண்ணியத்தால் நான் என் வேதனை யெல்லாம் முடிந்து, மோட்சத்துக்குப் போகிறேன். புண்ணியவதியான அந்தப் பெண்ணுக்கு மோட்ச பாக்கியத்திற்குப் போக நிலையான வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவியுங்கள்” என்று கூறி மோட்சம் சென்றார்.  

கிறிஸ்தவர்களே! 

அவரவர் அனுபவிக்கிற துன்பங்களையும், விசேஷமாய் பிறரும், உறவினரும், கணவன்-மனைவி, பெற்ற பிள்ளைகளும், மாமனார்-மாமியார் ஆகியோரும் கடுமையான வார்த்தைகளைச் சொல்வதையும், மோசமாகத் திட்டி அடிக்கிற அடிகளையும் தாங்கி இவற்றிற்காகப் பழிவாங்கக் கருதாமல், அந்தப் புண்ணியவதியைப்  போலத் தன் பாவங்களுக்குப் பரிகாரமாக அத்துன்பங்களை அனுபவித்தால், அது தபசு செய்வதற்கும் மேலானதொன்றாகும். இப்படிப்பட்ட ஏச்சு, பேச்சு, அடி, உதை போன்ற துன்பமிக்கவற்றை பொறுமை யோடு தாங்கி, புண்ணியங்களாக்கி, அப்புண்ணியத்தை இந்தப் புண்ணியவதியைப்போல உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுத்தால் பேருதவியாக இருக்கும்.  

உரோம் நகரில் மரணம் அடைந்த இன்னோசெந்சியுஸ் என்பவரின் ஆன்மா புனித லுத்கார்து என்கிற புனிதைக்குத் தரிசனம் தந்து தான் பொதுத் தீர்வை நாள் உலகம் முடியும் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேண்டுமென கடவுள் கட்டளையிட்டுள்ளார் என்றார்.  

அரகோனியா நாட்டில் அலெக்சாந்திரா என்கிறவள் புனித சுவாமிநாதருக்குக் காட்சியளித்து, தான் எழுநூறு வருடங்களாக  உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தாள்.  

பிரான்சிஸ்கா என்னும் பெண் புனித வின்சென்ட் பெரெரியாருக்குக் காட்சி தந்து தான் நடுத்தீர்வை நாள் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தாள்.  

மாறாக, இப்படி நம்முடைய எண்ணங்களுக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களுள் அநேக ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் பொதுத்தீர்வை நாள்வரை அவதியுற வேண்டியிருக்கிறது. ஆதலால் பூலோகத்தில் இருக்கிற காலங்களில் அற்பப் பாவம் முதலாய் செய்யாமலும், தான் தெரிந்தும், தெரியாமலும்  செய்த சகல பாவங்களுக்கும், சகலவித துரோகங்களுக்கும் நீங்கள் மண்ணுலகிலே பரித்தியாகம் 

செய்துவிடுங்கள்.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையபபரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!