உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள்
கீழ்ப்படிந்து செய்தபுண்ணியங்களால் உண்டான நற்பயன்.
இத்தாலி நாட்டில் புனித தோமினிக் சபை மடத்தில் எமிலி என்கிற கன்னியாஸ்திரீ மடத்தின் தாயாராய் இருந்தார்.
அவர் தனக்குக் கீழிருந்த கன்னியாஸ்திரீகளைப் பார்த்து அவர்கள் மரித்தபிறகு உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாதபடி தங்களைக் காத்துக்கொள்ள தான் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.
அம்மடத்திலுள்ள சபை ஒழுங்குப்படி இரவு, பகல் மற்றும் உணவு உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் தாகமாய் இருக்கிறவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டுமானால் மடத்துத் தாயாரின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றொரு உத்தரவு இருந்தது. அந்த உத்தரவின்படியே அம்மடத்திலுள்ள சில கன்னியாஸ்திரீகள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டிய சமயத்தில், மடத்துத் தாயாரிடம் உத்தரவு கேட்கும்போது, மடத்துத் தாயாரோ, இயேசுநாதர் சிலுவையில் அறையப் பட்டிருந்தபோது அவர் துன்புற்று, அனுபவித்த தாகத்தின் பொருட்டு நீங்களும் தண்ணீர் குடிக்காமல்,உங்களுக்கு ஏற்பட்ட தாகத்தைப் பொறுமையோடு அடக்கி வந்தால்,அது ஒரு நல்ல புண்ணியச் செயல் என்று கூறி அவர்கள் தண்ணீர்குடிக்க அனுமதி வழங்காமல் இருந்தார்.
அவர்களுள் செசிலியா என்கிற கன்னியாஸ்திரீ ஒரு நாள் வெயிலின் கடுமையால் தாகம் மிக ஏற்பட மடத்துத் தாயாரிடம் தண்ணீர் குடிக்க உத்தரவு கேட்டார்.அவரோ "நீர் குடிக்க ஆசைப்படுகிற தண்ணீரைச் சிலுவையில் இயேசு ஆண்டவர் அனுபவித்த தாகத்தை குறித்துஅவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடு. நீ இறந்த பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வேகிறபோது அந்த நெருப்பை அணைக்க தண்ணீரை இயேசுநாதர் உனக்கு அனுப்பி வைக்க அவரை வேண்டிக்கொள்"என்று கூறி தண்ணீர் குடிக்க அனுமதி கொடுக்கவில்லை.
செசிலியா தனக்கு ஏற்பட்ட கடும் தாகத்தினால், மிகவும் வருந்தினாலும், மடத்துத் தாயாரின் சொற்படி கீழ்ப்படிந்து தாகத்தை அடக்கிக் கொண்டு, அப்புண்ணியத்தை இயேசுநாதருக்கே காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாள். அத்தகைய புண்ணியத்தின் பேரில், அதிகம் அன்பு கொண்ட இயேசு நாதர் தாம் கன்னியாஸ்திரீ செசிலியா மீது கொண்ட அன்பை அவள் மரித்த மூன்றாம் நாள் வெளிப்படுத்தினார். மடத்துத் தாயார் தியானத்தில் இருந்தபோது பெரும் மகிழ்ச்சியோடும், மகிமையோடும் செசிலியா அவருக்குத் தோன்றி, தான் மரித்த பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் என்னுடைய அற்பப் பாவங்களைத் தீர்க்க அநேக நாள் நெருப்பில் துன்புற ஆண்டவர் கட்டளையிட்டார்.
ஆயினும், மூன்றாம் நாள் என்னுடைய காவல் சம்மனசு என்னைச் சுற்றிலும் எரிகிற நெருப்புச் சுவாலையில் அந்தத் தண்ணீரை தெளித்தவுடனே என்னைச் சுட்ட நெருப்பு அணைந்து போகவே, சம்மனசு என்னை மோட்சத்துக்கு அழைத்துப்போனார் என்று கூறி மறைந்தாள்.
கிறிஸ்தவர்களே! பசியை அடக்குதல், தாகத்தை அடக்குதல், தூக்கம் வருகையில் தூங்காமல் இருத்தல் போன்ற ஒறுத்தல் முயற்சிகளால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக உதவி புரியலாம்.
இப்படிப்பட்ட ஒறுத்தல்மிகு நற்செயல்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களை சுடுகிற நெருப்பு அணைந்து போவதுமல்லாமல் நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போக நேர்ந்தால் உங்களைச் சுடுகிற நெருப்பும் அணைந்தும் போகும் அல்லவா?
"உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்குள்ள நெருப்பு ஓய்வில்லாத நெருப்பு" என்று புனித இலாரியார் கூறியுள்ளார். குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகள் தினம் தினம் அடித்தாலும், பின்னர் அடங்கிவிடும். அவன் உறங்கும்போது வலியில்லாமல் இருப்பான். தினம் காயங்களுக்குக் கட்டுப் போடும்போது அவன் அனுபவிக்கிற வேதனை மற்ற நேரங்களில் விசேடவிதமாய் அவனுடைய நித்திரை நேரத்தின்போது இருக்காது. ஆனால், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் நிலை அப்படியல்ல, அவர்கள் அங்கே இருக்கும்வரை இரவும், பகலும் கடும் கொடுமையான வேதனை அனுபவிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை! ஆதலால் திவ்விய பலி பூசை ஒப்புக் கொடுத்தல், ஒறுத்தல் முயற்சியைக் கடைப்பிடித்து ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தல் போன்றவற்றால் உத்தரிக்கிற ஸ்தல ஆக்கினை கட்டாயம் குறையும்.
ஆமென்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment