செய்த பாவங்களுக்கு பரிகாரம் அவசியம்.

 


செய்த பாவங்களுக்கு பரிகாரம் அவசியம்.


 பாவம் என்பது மனிதன் கடவுளின் கட்டளையை மீறுவதே. மனிதன் தன் உதடுகளால் இல்லையென்றாலும், தன் செயல்களைக் கொண்டு கடவுளிடம்: "நீர் எனக்கு ஒரு பொருட்டல்ல, நீர் இருப்பதும் இல்லாததும் எனக்கு ஒன்றுதான்; என் சொந்த விருப்பமே என் கடவுள்: அந்தப் பெண்ணையும், இந்தச் சொத்தையும் அந்த உலக இன்பத்தையும் போல நீர் எனக்குப் பிரியமானவராக இல்லை" என்று செயலில் வெளிப்படுத்துவதே.


ஒவ்வொரு பாவமும் கடவுளின் சட்டத்திற்கு எதிராக அனுபவிக்கப்பட்ட ஒரு முறையற்ற இன்பத்தில் அடங்கியிருக்கிறது. பாவத்தில் கடவுளின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓர் இன்பமும், கடவுளின் சட்டத்தை மீறியதால் அவருக்கு ஏற்படும் நிந்தை அவமானமும் இருக்கிறது. எனவே, பாவப் பரிகாரத்தில், அந்த முறையற்ற இன்பத்திற்கு எதிராக ஒரு துன்பத்தை ஏற்றுக்கொள்வதும், அந்தத் துன்பத்தைக் கடவுளின் மகிமைக்காக மனப்பூர்வமாகவும், அமைந்த மனதோடும் ஏற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கிறது.


உதாரணமாக அமைந்த மனதோடு நமக்கு வரும் நோய்களையும் உடல் வலிகளையும் கடவுளை நினைத்து நாம் செய்த பாவங்களுக்கு தண்டனையாக ஏற்றுக்கொள்வது ஒரு நல்ல பாவ பரிகாரம்.


நமக்கு எதிராக உற்றார் உறவினர்கள்,மேலாளர்கள் புண்படும் விதத்தில் பேசும்போதும் மனதை காயப்படுத்தும்போதும் எதிர்த்துப் பேசாமல் அமைதியுடன் கடவுளை நினைத்து நாம் செய்த பாவங்களுக்கு தண்டனையாக ஏற்றுக்கொள்வது ஒரு நல்ல பாவ பரிகாரம்.


நாம் செய்த பாவங்களை மனதில் நினைத்து அதை பரிகரிக்க செய்யப்படும் ஏழை எளியவர்களுக்கு செய்யும் தான தர்மங்கள் ஒரு நல்ல பாவ பரிகாரம்.


கடவுளுக்கு எதிராக நாம் செய்த முறையற்ற இன்பத்திற்கு ஈடு செய்வதற்கு நமக்கு ஆண்டவர் அனுமதிக்கும் துன்பங்களை நன்றியுடன் ஏற்றுக்கொள்வது மிக மிக அவசியம்.


எனவே நமக்கு வரும் துன்பங்களை முணுமுணுக்காமல் அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்வதே நாம் செய்த பாவங்களுக்கு சிறந்த உட்சபட்ச பாவ பரிகாரம்.


*ஏன் பாவம் பரிகாரம் செய்ய வேண்டும்?*


பரிகரிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்ட பாவங்கள் கடவுளிடம் இருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள தடையாக இருக்கிறது.ஆண்டவருடைய இரக்கம் நமக்கு நல்லவற்றை செய்வதற்கு முயற்சித்தாலும் அவருடைய நீதியின்படி நமது தகுதியற்ற பாவ நிலையினால் அவரது இரக்கத்தையும் ,அருளையும் முழுமையாக பெறமுடியாமல் போகின்றது.


செய்த பாவத்திற்கு உரிய பரிகாரம் செய்யாமல் மரிக்கும்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் கொடுமையான ஆக்கினியால் நெடுநாள் வேதனைபட வேண்டியிருக்கும்.


நாம் செய்த பாவத்திற்கு , நமக்கு வரும் துன்பங்களை தணடனையாக ஏற்றுக்கொண்டு நம்மை நாமே தணடித்துக்கொள்ளும் போது இறைவன் நமது பாவத்திற்கு தண்டிக்கவும் அவசிமில்லாமல் போகின்றது.


செய்யும் பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க வீட்டிலும், நாட்டிலும் துன்பங்களும் பிரச்சனைகளும் அதிகரிக்கும்.நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவே கடவுள் துன்பங்களை அனுமதிக்கிறார். 


பாவத்திற்கு தண்டனையாக ஏற்றுக்கொள்ளாமல் நமது வாழ்வில் வீணாகும் துன்பங்கள் ஒவ்வொன்றும்,புண்ணியங்களை சம்பாதித்துகொள்ள கடவுள் அனுமதிக்கும் வரங்கள். 


 நான் செய்த பாவத்தினால் தான் இந்த துன்பம், இந்த நோய், இந்த அவமானம் எனக்கு நேர்ந்தது என்ற எண்ணத்தோடு நமக்கு வரும் வரை துன்பங்கள் ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளும் போது நாம் செய்த பாவத்திற்கு ஏற்ப துன்பங்களின் அளவு படிப்படியாக குறையும் அல்லது முழுவதுமாக நம்மைவிட்டு விலகும்.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே

 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!