ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
நற்செய்தி வாசகம் லூக்கா 16 (1-8)ஆம் அதிகாரம்
*உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்கான உவமை . *
நவம்பர் மாதம் முழுவதும் திருச்சபை கத்தோலிக்கர்களை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக முன்மதியோடு செபித்து ஆண்டவரின் பாராட்டை பெற அழைக்கிறது.
வீட்டின் உரிமையாளர்- இறைவன்
நேர்மையற்ற வீட்டு பொறுப்பாளர்- நாம்.
கடன் பட்டவர்கள் - உத்தரித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள்.
பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படைத்தல்-மண்ணுலக பாவ புண்ணிய கணக்கை இறைவனிடம் ஒப்படைத்தல்.தீர்வின் நாள்.
மண்ணுலகில் வாழும் நாம் நமது இறப்பிற்கு முன், உத்தரிக்கும் ஆன்மாக்களின் தண்டனை காலத்தை குறைக்க முடியும். ( உதாரணமாக ஒரு ஆன்மாவின் அல்லது இறந்த நமது தாய் தந்தையரின் உத்தரிக்கும் 500 ஆண்டுகள் வேதனையை நமது திருப்பலியாலும்,செபமாலை யாலும்,தர்மத்தாலும்,ஒறுத்தல் முயற்சிகளாலும் 400ஆண்டுளாக குறைத்தால்) நாம் முன்மதியோடு செயல்பட்டவர்களாவோம்.
உத்தரிக்கும் ஆன்மாக்களின் வேதனை காலத்தை குறைக்கவும் ,மாற்றி எழுதும் வல்லமை, நேர்மையற்ற வீட்டு பொறுப்பாளராகிய நம்மிடமே நமதாண்டவர் வழங்கியுள்ளார்.
*கடனை குறைப்பதால் வீட்டு உரிமையாளர் எவ்வாறு மகிழ்வார்?*
எந்த வீட்டு உரிமையாளரும், இந்த உவமையில் வீட்டு பொறுப்பாளர் செய்ததை போல முன்மதியோடு வர வேண்டிய கணக்கை குறைத்து எழுதினால் இன்னும் அதிகமாக தான் வெறுப்படைவார்.ஆனால் மகிழ்ச்சி கொள்கிறார்.இதுவே மறைந்திருக்கும் உவமையின் கரு. இது மண்ணுலக கணக்கை பற்றியது அல்ல என்பதை புரிந்துக்கொள்வதற்கு.
நரகத்திற்கு இணையாக வேதனைபடும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் வேதனைகளை குறைத்துக்கொள்ள உத்தரிக்கும் ஆன்மாக்களால் முடியாது.அதே சமயம் இறைவனின் நீதியினால் வேதனைப்படும் இவ்வான்மக்கள் மீது இரக்ககொண்ட நமதாண்டவர்,அவர்களுக்கு உதவும் வல்லமையை அதாவது தண்டனை காலங்களை குறைக்கும் / மாற்றி எழுதும் அதிகாரத்தினை மண்ணுலகினருக்கு வழங்கியுள்ளார்.
*எதற்காக ?*
*இதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன ?*
திருச்சபை மூன்று நிலைகளை கொண்டது
1,வெற்று பெற்ற திருச்சபை -புனிதர்கள்
2,துன்புறும் திருச்சபை - உத்தரிக்கும் ஆன்மாக்கள்
3,போராடும் திருச்சபை - நாம் மண்ணுலகத்தினர்.
உத்தரிக்கும் நிலையில் இருப்போரும் திருச்சபையின் அங்கத்தினரே ,நமது குடும்பத்தினரே ,எனவே அவர்கள் விடுதலைக்காக நாம் உதவி செய்வது நமது கடமை. உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுதலையாகும் ஒவ்வொரு உத்தரிக்கும் ஆன்மாக்களும் நமது நன்றியை மறவாத கைம்மாறு உதவி செய்ய கூடிய *புனிதர்களாகின்றனர்.* நமது ஆன்ம இரட்சணயத்திற்கு உதவும் நிலையான விண்ணக நண்பர்கள்.
மேலும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிக்கும் பழக்கமுள்ள குடுபங்கள் தங்கள் குடும்பத்திலுள்ள ஆன்மாக்களுக்கு உதவி கொண்டே இருக்கின்றனர் .நாம் மரித்தாலும் நமக்காக செபிக்கும் பழக்கத்தினை தொடர்கின்றனர்.
முன்மதியோடு செயல்படாமல் இறந்த நமது குடும்ப ஆன்மாக்களின் மீது அக்கரையில்லாமல் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்காமல் செபிக்காமல் இருப்பது *உண்மை கத்தோலிக்கர்கள்* செய்யும் செயலாகாது,நம்மைவிட்டு பிரிந்த ஆன்மாக்களுக்கு நாமே செய்யும் துரோகமாகும். இதனால் உத்தரிக்கும் வேதனைகளை முழுவதும் அடைவதோடு, ஆண்டவர் நம் வழியாக அவர்களுக்கு கொடுக்கும் வரங்களை நாமே தடுத்துவிடுகிறோம்.ஒருவேளை நாம் மரித்தாலும் நமது குடும்பத்திலுள்ளவர்கள் நம் ஆன்ம விடுதலைக்கான முயற்சிகளை அலட்சியம் செய்து ,நீண்ட நாள் உத்தரிக்கும் வேதனை முழுவதையும் அனுபவிக்கும் அதே நிலை தான் நமக்கும் உருவாகும்.*எந்த அளவையில் அளக்கின்றோமோ அதே அளவையில் திருப்பி அளக்கப்படும்*
*✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8*
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”
இயேசுவுக்கே புகழ் !
அன்னைமரியாயே வாழ்க !

Comments
Post a Comment