தூய ஸ்தேவான்
புனிதரைப் பற்றி தூய புல்ஜென்சியஸ்
“தூய ஸ்தேவான் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருந்தவர் ஆவார். அவர் கடவுள் மீது கொண்ட அன்பினால் அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். மனிதர்கள்மீது கொண்ட அன்பினால் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். அன்புதான் தூய ஸ்தேவானின் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தது”.
இன்று நாம் திருச்சபையின் முதல் மறைசாட்சியான தூய ஸ்தேவானின் விழாவைக் கொண்டாடுகின்றோம். நேற்று கிறிஸ்துவின் பிறப்புவிழாவைக் கொண்டாடி விட்டு, இன்று ஒரு மறைசாட்சியின் விழாவைக் கொண்டாடுவது பொருத்தமானதாக இருக்குமா? என நாம் நினைக்கலாம். ஆனால் கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் என்றைக்கு இந்த மண்ணில் தளைத்தோங்கத் தொடங்கியதோ, அன்றைக்கே கிறிஸ்தவத்திற்கு எதிராக பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது என்பதைக் குறித்துக் காட்டுவதற்காகவோ என்னவோ, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு அடுத்த நாளில் தூய ஸ்தேவானின் மறைசாட்சிய விழாவைக் கொண்டாடுகின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஸ்தேவான் அல்லது முடியப்பர் எருசலேமில் பிறந்தவர், கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்றவர்; கிரேக்க மொழி பேசும் புறவினத்துக் கிறிஸ்தவர்.
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வந்தது. எனவே, அவர்களுக்கு இறைவாக்கை எடுத்துரைக்கவும் ஏழைகளுக்கு அதிலும் குறிப்பாக கிரேக்க மொழிபேசும் கைம்பெண்களுக்கு உணவு பரிமாற முடியாத ஒரு சூழ்நிலை திருத்தூதர்களுக்கு ஏற்பட்டது. இத்தகைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திருத்தூதர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஏழு திருத்தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களில் முதன்மையானவர்தான் ஸ்தேவான். ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் நிறைய வல்ல செயல்களைச் செய்பவராய் இருந்தார். அதோடுகூட கிரேக்க மொழிபேசும் கைம்பெண்களுக்கு உணவு பரிமாறும் பணியினைச் சிறப்பாகச் சிறப்பாகச் செய்தார். மேலும் இறைவாக்கை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.
தூய ஆவியினாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்ட ஸ்தேவன் ஒரு சமயம் உரிமையடைந்தோர் எனப்படும் மக்களுக்கு மத்தியில் பேசும்போது அவரோடு பேசுவதற்கு அங்கிருந்த யாவருமே திராணியற்றுப்போனார்கள். இதைப் பார்த்த பரிசேயக்கூட்டம் அங்கிருந்தவர்களுக்குப் பணம்கொடுத்து, ஸ்தேவான் மோசேவுக்கும் கடவுளுக்கும் எதிராகப் பேசுகிறார் என்று சொல்லி அவரைத் தலைமைச் சங்கத்திற்கு முன்பாக இழுத்துச் சென்றார்கள். தலைமைச் சங்கத்திற்கு முன்பாக அவர் பேசிய பேச்சுதான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஸ்தேவான் தலைமைச் சங்கத்திற்கு முன்பாக ஆற்றிய உரையில் மூன்று முக்கியமான உண்மைகள் அடங்கியிருந்தன. முதலாவது கடவுள் எருசலேம் திருக்கோவிலில் மட்டும் பிரசன்னமாக இருக்கவில்லை, அவர் எல்லா இடங்களிலும் பிரசன்னமாக இருக்கின்றார். இரண்டாவதாக இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் தொடர்ந்து கடவுளின் பணியாளர்களை புறக்கணித்து, அவர்களைத் துன்புறுத்தி வருகிறார்கள். மூன்றாவதாக யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தந்தைக் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிக்ருகிறார். (திப 7:1-53)
இப்படிப்பட்ட பேச்சைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் ஸ்தேவானை நகருக்கு வெளியே இழுத்துச் சென்று அவரைக் கல்லால் எறிந்துகொன்றனர். இதற்கு உடந்தையாக இருந்தவர் சவுல் என்ற இளைஞர். அவர்கள் ஸ்தேவானை நோக்கி கற்களை எறிந்தபோது அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்தார். அப்போது வானம் திறந்திருப்பதையும் கடவுளின் மாட்சியையும் தந்தைக் கடவுளின் வலப்பக்கத்தில் இயேசு கிறிஸ்து வீற்றிருப்பதையும் அவர் கண்டார். பின்னர் அவர் முழந்தாள் படியிட்டு, தன்னைத் துன்புறுதியவர்களுக்காக ‘தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களது குற்றங்களை மன்னியும்” என்று சொல்லி அவர்களுக்காக ஜெபித்தார். கடைசியில் அவர், “தந்தையே! உம்முடைய கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார்.
ஏறக்குறைய ஸ்தேவானின் இறப்பின்போது நடந்த நிகழ்வுகளும் ஆண்டவர் இயேசுவின் இறப்பின்போது நடந்த நிகழ்வுகளும் ஒத்துப் போகின்றன. ஆண்டவர் இயேசு தன்னை வதைத்தவர்களுக்காக ஜெபித்தது போல ஸ்தேவானும் தன்னை வதைத்தவர்களுக்காக ஜெபித்தார்; ஆண்டவர் இயேசு இறப்பதற்கு முன்பாக, “தந்தையே உம்முடைய கையில் என்னுடைய ஆவியை ஒப்படைக்கின்றேன் என்று சொன்னதுபோன்று ஸ்தேவானும் சொல்லி, தன்னுடைய ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தரும் பேறுபெற்றார்.


Comments
Post a Comment